இதைச் செய்வதால் நாம் கோவிட்டை வீழ்த்தி விடுவோமா? பிரதமர் மோடியின் பேச்சைச் சாடிய குஷ்பு

இதைச் செய்வதால் நாம் கோவிட்டை வீழ்த்தி விடுவோமா? பிரதமர் மோடியின் பேச்சைச் சாடிய குஷ்பு
Updated on
1 min read

பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு எதிராக, குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவும் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் 21 நாட்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடந்த 25-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இன்று ஊரடங்கு உத்தரவில் 9-வது நாளை மக்கள் எட்டியுள்ளார்கள். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்தச் சூழலில் பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். அதில், "மக்கள் ஊரடங்கு, மணி அடித்தல், கை தட்டுதல், அனைத்திலும் தேசத்தில் உள்ள மக்கள் சோதனையான நேரத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறீர்கள். கரோனாவுக்கு எதிரான போரில் இந்த தேசம் ஆழ்ந்த ஒற்றுமையுடன் இருப்பதை நம்பமுடிகிறது.

கரோனாவால் உருவான இருளை நாம் நம்பிக்கை எனும் ஒளி மூலம் அகற்ற வேண்டும். வரும் ஞாயிற்றுக்கிழமை (5-ம் தேதி) இரவு 9 மணிக்கு அனைத்து மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்து இந்தியர்களின் வலிமையை வெளிப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் வாசலில் அல்லது பால்கனி பகுதியில் விளக்கு ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ, டார்ச்லைட், செல்போன் லைட்டை ஒளிரவிட்டு, சக மக்கள் குறித்துச் சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு ட்விட்டர் தளத்தில் ஆதரவும், கிண்டலும் ஒருசேரக் கிடைத்து வருகிறது. பிரதமரின் இந்தப் பேச்சுக்கு நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நான் பிரதமரின் கொள்கைகளுக்கும், சித்தாந்தங்களுக்கும் எதிரானவள். ஆனால் அவர் இருக்கும் பதவிக்கு எப்போதும் மரியாதை தருவேன். நமக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ அவர் நமது பிரதமர். அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவரை வசை பாடுவது உதவாது. ஆனால் நரேந்திர மோடி அவர்களே நீங்கள் வேறொரு நல்ல யோசனையைத் தரலாம். கரோனாவை வீழ்த்த ஒரு கண்டுபிடிப்பு, ஏதாவது. இதைச் செய்வதனால் (மின் விளக்குகளை அணைப்பது) நாம் கோவிட்டை வீழ்த்திவிடுவோமா?

யாரும் வீட்டை விட்டு வெளியே வந்து எதையும் ஏற்ற வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். சமூக விலகல்தான் இப்போது அதி முக்கியம். தயவுசெய்து கேளுங்கள். இந்தியப் பிரதமரிடமிருந்து எதிர்பார்ப்பது ஒரு திட்டம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, தினக்கூலிப் பணியாளர்களை, சிறு குறு தொழில்களைப் பாதுகாக்க யோசனை. இது அறுவடை நேரம் என்பதால் விவசாயிகளுக்கு நிவாரணம். அவர்களின் அறுவடையைக் கொள்முதல் செய்து அதை மக்களுக்குச் சென்று சேர்க்க உதவ வேண்டும். எதையும் செய்யாதபோது அது ஆழமாகப் பாதிக்கிறது".

இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in