மக்களிடம் நேர்மறை எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டும்: விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி வலியுறுத்தல்

மக்களிடம் நேர்மறை எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டும்: விளையாட்டு வீரர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி வலியுறுத்தல்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பரவுதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.

காட்சி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகள், நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினர், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடனும் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களுடன் அவர் இன்று உரையாற்றினார். நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்கள் 40 பேர் பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, விராட் கோலி பி.வி. சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் பரவுதை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களிடம் நேர்மறையான எண்ணங்களை கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும், இதில் விளையாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்ற முடியும் எனவும் அவர் கூறினார். இதன் மூலம் கரோனா வைரஸை விரட்டுவதில் மக்களுக்கு தார்மீக ரீதியாக விளையாட்டு வீரர்கள் பங்களிப்பை செய்ய முடியும் என பிரதமர் மோடி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in