Last Updated : 03 Apr, 2020 12:25 PM

 

Published : 03 Apr 2020 12:25 PM
Last Updated : 03 Apr 2020 12:25 PM

 நாக்பூரிலிருந்து நாமக்கலுக்கு நடந்தே வந்த தமிழக மாணவர்;   தெலங்கானா மாநிலம் வந்தபோது சுருண்டு விழுந்து பலி

பிரதிநிதித்துவப் படம்.

ஹைதராபாத்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 22 வயது மாணவர், லாக்-டவுன் காரணமாக நடந்தே சொந்த மாவட்டமான நாமக்கலுக்கு வரும்போது தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே சுருண்டு விழுந்து பலியானார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக மையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் கடந்த 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.

இதனால் வேலையிழந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்குக் குடும்பத்தினருடன் சென்று வருகின்றனர். அவர்களும் பல்வேறு இடங்களில் தடுத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே வர்தா எனும் இடத்தில் வேளாண் கல்லூரியில் படித்து வந்தவர் 22 வயதான பாலசுப்பிரமணி லோகேஷ். தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவரான லோகேஷ், லாக்-டவுன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், தனது நண்பர்கள் 30 பேருடன் சேர்ந்து நடைபயணமாக சொந்த ஊருக்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 450 கி.மீ. தொலைவை 4 நாட்கள் நடந்தே கடந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே போவனப்பள்ளி சோதனைச் சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த வருவாய்த் துறையினர், போலீஸார் அவர்களை மறித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், நடந்து செல்லக்கூடாது, தங்குவதற்கு இடமும், உணவும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

அப்போது திடீரென லோகேஷ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த போலீஸார், வருவாய் அதிகாரிகள் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். ஆம்புலன்ஸில் ஏற்றும் முன் முதலுதவி அளிக்கப்பட்டபோது சிகிச்சை பலனளிக்காமல் லோகேஷ் உயிரிழந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், “லாக்-டவுன் அறிவிக்கப்பட்ட பின் நாக்பூரிலிருந்து 450 கி.மீ. பயணித்து 30க்கும் மேற்பட்டோர் வந்தார்கள். அங்கிருந்து நடந்தும், அத்தியாவசியப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஏறியும் மாறி மாறி வந்தனர். எத்தனை கிலோ மீட்டர் நடந்தனர் எனத் தெரியவில்லை..

புதன்கிழமை இரவு சோதனைச்சாவடி வந்தபோது அவர்களை மறித்து விசாரணை நடத்தினோம். அரசின் சார்பில் தங்குமிடத்தில் இருக்குமாறு கூறினோம். அப்போது அதில் ஒருவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி சுருண்டு விழுந்தார். ஆம்புலன்ஸ் வரவழைத்து முதலுதவி அளித்தபோது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவர் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பது தெரியவந்தது. அதன்பின் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு, உடன் வந்த நண்பர்களுடன் அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது“ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x