

கேரளாவில் புதனன்று புதிதாக 24 கரோனா பாசிட்டிவ் தொற்று உறுதியான நிலையில் நேற்று வியாழக்கிழமையன்று புதிதாக 21 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்துள்ளது, இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 286 ஆக கேரளாவில் அதிகரித்துள்ளது.
இருவர் பலியாக, 28 பேர் குணமடைந்ததில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுபவர்கள் எண்ணிக்கை 256 பேர்களாக உள்ளனர்.
தப்லிகி ஜமாத் சென்று வந்த இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லத்தையும் இன்னொருவர் திருச்சூரையும் சேர்ந்தவர். நிஜாமுதீன் சம்பவத்தில் கலந்து கொண்டவர்களில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆன முதல் இருவர் இவர்கள்தான்.
கரோனா பாசிட்டிவ் கேஸ்கள் பெரிய அளவில் வெடிக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு 5 நாட்களிலும் பாசிட்டிவ் கேஸ்கள் அதிகரிக்கின்றன.
3வது நாளாக கேரளாவின் காசர்கோடு பாசிட்டிவ் கேஸ்களில் முதலிடம் வகிக்கிறது. 21 புதிய கரோனா தொற்றுக்களில் காசர்கோடில் மட்டும் 8 பேர். இதன் மூலம் காசர்கோடில் மட்டும் பாசிட்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில் 47 பாசிட்டிவ்களுடன் கண்ணூர் 2ம் இடத்தில் உள்ளது. எர்ணக்குளம் 24, திருவனந்தபுரம் 13, மலப்புரம் 13, திருச்சூர் 11, இடுக்கி 10, கோழிக்கோடு 7, பாலக்காடு 6, கொல்லம் 5, கோட்டயம் 3, வயநாடு 3, ஆலப்புழா 2 என்று மொத்தம் 286 கரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அங்கு உள்ளன.
வடக்கு காசர்கோடில் உள்ளவர்கள் கர்நாடக மாநிலம் மங்களூரில் சிகிச்சைப் பெற எல்லைகள் திறக்க வேண்டும் என்று கேரளா கோரிக்கை வைத்துள்ளது, ஆனால் கர்நாடகா அச்சம் காரணமாக எல்லைகளை மூடியுள்ளது.
வியாழக்கிழமை நிலவரங்களின் படி கேரளாவில் 1,65,934 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இப்போது வரை 8,456 சாம்பிள்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 7622 கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.