

ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி உஸ்மான் கான் நேற்று ஜம்மு உயர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
பலத்த பாதுகாப்புடன் உஸ்மான் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வலுக்கட்டாயம் காரணமாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களா அல்லது விருப்பத்தின் பேரில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது விருப்பத்தின் பேரில் வாக்குமூலம் அளிப்பதாக உஸ்மான் கூறினார். இதையடுத்து அவரது வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்தார். அதில் பாகிஸ்தானில் உள்ள தனது குடும்பம், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட விதம் உள்ளிட்டவற்றை அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. மதியம் 1 மணி முதல் மாலை 4.30 அவரது ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக ஆகஸ்ட் 5-ம் தேதி உதம்பூர் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியபோது உஸ்மான் கான் உயிருடன் பிடிக்கப்பட்டார். இத்த தாக்குதலில் இரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். உஸ்மானுடன் வந்த மற்றொரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.