

இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய 3 வங்கதேசத்தவர்கள் உட்பட 6 பேர் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சுதந்திர தின கொண்டாட் டத்தை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக, ஹைதராபாத்தில் காவல் துறையினர் வாகன சோதனை மற்றும் வீடு, கடைகள், விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வங்க தேசத்தை சேர்ந்த முகமது நஜீர், ஃபைசல் முகமது, முகமது உஸ்மான் மற்றும் ஹைதராபாத் சஞ்சல் கூடா பகுதியை சேர்ந்த மசூர் அலிகார், பாலாபுரை சேர்ந்த ஷோகன் பர்வேஜ், தபீர்புரா பகுதியை சேந்த ரியாபுல் ரஹ்மான் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஹைதராபாத் நகர காவல்துறை ஆணையர் மஹேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவர்களில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மூவருக்கும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பல இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற வங்க தேசம், சிரியா போன்ற பல நாடுகளுக்கு இவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த 6 மாதத்தில் மட்டும் 15 பேரை இவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் தீவிரவாத பயிற்சி பெற்று ஹைதராபாத் திரும்பியவர்களுக்கும் உதவி செய்து வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஹைதராபாத் தில்ஷுக் நகரில் இரட்டை வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதி வகான் இந்திய எல்லையை விட்டு வெளியேற இவர்கள் உதவி புரிந்துள்ளனர்.
இவர்களிடமிருந்து போலியாக தயாரிக்கப்பட்ட 4 பாஸ்போர்டுகள், 100 ஆதார் மற்றும் 100 வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 28-ம் தேதி வரை காவலில் எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.