

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் மதுபானக் கடையை உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், இந்தியா முழுவதும் அத்தியாவசிய பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணிகளுமே நடக்கவில்லை.
மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
இதில் பல மாநிலங்களில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதீதமான மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், அடிமையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கர்நாடக மாநிலம் காட்கேயில் உள்ள மதுபானக் கடையை உடைத்து 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சிலர் திருடிச் சென்றனர். இதையடுத்து கலால் வரித்துறையினர் மதுபானக் கடைக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் மதுபான இருப்பு குறித்து தகவல்களை சேகரித்தனர். மதுபான பாட்டில்களை அள்ளிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.