தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரின் அடையாளம் கண்டுபிடிப்பு; அனைவரும் மருத்துவமனையில் தனிமை: டெல்லி போலீஸார் நடவடிக்கை

கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
1 min read

டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டினர் 275 பேரை டெல்லி போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் பல்வேறு மசூதிகளில் பிரிந்து தங்கி இருப்பதாக டெல்லி சிறப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல்வேறு மசூதிகளிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 275 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்தனர்

அதுகுறித்து டெல்லி போலீஸார் நிருபர்களிடம் கூறுகையில், “தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று வெளிநாட்டினர் 275 பேர், பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்தனர். அவர்களில் 172 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள், 36 பேர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள். மேலும், வங்கதேசத்தைச் சேர்ந்த 21 பேர், மலேசியாவைச் சேர்ந்த 12 பேர், அல்ஜீரியாவைச் சேர்ந்த 7 பேர், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவைச் சேர்ந்த தலா இருவர், பிரான்ஸ், துனிசியா, பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் இதில் பங்கேற்றனர். அனைவரும் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் வடகிழக்குப் பகுதியில் 84 பேரும், மத்திய மாவட்டத்தில் 109 பேரும் தங்கியிருந்தனர். எங்களுடன் மாவட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் சேர்ந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவரும் சமூக விலக்கலைப் பின்பற்றவி்லலை. முதல் கட்ட சோதனையில் இவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in