கரோனா சிகிச்சை: நர்சிங் மாணவர்களைப் பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பற்றாக்குறை சூழல் உருவாகும் நிலையில், நர்சிங் மாணவர்கள் மற்றும் அரசின் பல்வேறு துறையில் பணியாற்றி வரும் மருத்துவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பரவலின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் மேலும் மேலும் கூடிவருகிறது. இதனால் கோவிட்-19 காய்ச்சல் காரணமாக சிகிச்சை அளிப்பதற்கான மனித வளம் குறைவாக இருப்பதையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று கூறியுள்ளதாவது:

''நோய் பரவாமல் இருப்பதற்கான கண்காணிப்பு, அடிமட்டக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மேற்பார்வை மேலாண்மை மற்றும் ஆய்வகப் பரிசோதனை உள்ளிட்ட பகுதிகளில் தேவையான எண்ணிக்கையில் ஆட்களை நியமிக்கும் முயற்சிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கையிருப்பில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மனித வளமும் நம்மிடம் குறைவாகவே உள்ளது.

இக்குறைபாட்டைப் போக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள அலோபதி மருத்துவர்கள், ராணுவம், துணை ராணுவம் மற்றும் ரயில்வேயில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், ஆயுஷ் மருத்துவர்கள், மருத்துவப் பயிற்சியாளர்கள், இறுதி ஆண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் நர்சிங் மாணவர்கள் (எம்.எஸ்சி / பிஎஸ்சி இறுதி ஆண்டு) ஆகியோரும் கோவிட்-19 நோயாளிகளைக் கவனித்து சிகிச்சை அளிக்க நியமிக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in