

டெல்லி தப்லீக் ஜமாத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 569 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் மத வழிபாடு மாநாடு நடந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. இந்த சூழலில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அப்போது நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கெனவே தங்கள் மாநிலங்களுக்குச் சென்றுவிட்டனர். அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியும், மருத்துவப் பரிசோதனை செய்யும் பணியும் நடந்து வருகிறது.
அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தப்லீக் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 569 பேரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்து வருகின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் முடிவுகள் வந்துவிடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
9 மதகுருக்கள் மீது வழக்கு
இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருக்கள் 9 பேர் விதிமுறையை மீறி டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்று தற்போது நேபாள எல்லையில் உள்ள ஒரு மதரஸாவில் மறைந்துள்ளனர். இவர்கள் 9 பேர் மீதும் ஐசிபி பிரிவு 188, 269, 270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்
ஸ்ராவஸ்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுப் குமார் கூறுகையில், “ மகாலி்ப்பூர் பகுதியைச் சேர்ந்த அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த 9 மவுலானாக்களை போலீஸார் அடையாளம் கண்டனர். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள். இவர்கள் கடந்த 13-ம் தேதி உ.பி.க்கு வந்து மசூதியில் தங்கிவிட்டு, நேபாளம் சென்றுள்ளனர். இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
8 வெளிநாட்டினர்
இதற்கிடையே கான்பூர் அருகே பாபுபுர்வாரா பகுதியில் ஒரு மசூதியில் தங்கியிருந்த ஈரான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 8 பேரை போலீஸிடம் சிக்கினர். இவர்களிடம் விசாரணை நடத்தியபோது டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது. இவர்கள் 8 பேரையும் போலீஸார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கான்பூர் போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கான்பூர் காவல் டிஐஜி ஆனந்த் திவாரி கூறுகையில், “வெளிநாடுகளைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்கள். இவர்களின் மீது ஐபிசி சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகியவை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் 8 பேரின் பாஸ்போர்ட்டையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.