

கரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதுல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் போன்றவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் அவசியம், எனவே அதில் முழுகவனம் செலுத்த வேண்டும் என மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின்போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி அத்தியாவசிய பொருட்கள், மருந்துப் பொருட்கள் கையிருப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அப்போது மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
‘‘கரோனா பரிசோதனை, தொற்று உள்ளவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதுல், மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல் போன்றவை அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் அவசியம். எனவே மாநில அரசுகள் அதில் கவனம் செலுத்த வேண்டும். கரோனா பரவாமல் தடுப்பதில் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது.
அதுபோலவே அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பை கவனித்துக் கொள்வதும் மிகவும் அவசியம். குறிப்பாக மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் இருப்பை உறுதி செய்ய வேண்டும். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தேவைப்படும் கச்சா பொருட்களும் போதுமான அளவு தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.