Published : 02 Apr 2020 14:52 pm

Updated : 02 Apr 2020 14:53 pm

 

Published : 02 Apr 2020 02:52 PM
Last Updated : 02 Apr 2020 02:53 PM

நீங்கள் எடுத்த முடிவு அறிவியல் பூர்வமானதா? சிறப்பு அனுமதி மூலம் மது வழங்கத் தடை: கேரள அரசைச் சாடிய உயர் நீதிமன்றம்

kerala-hc-stays-govt-order-on-special-passes-for-tipplers-to-buy-liquor
கோப்புப்படம்

கொச்சி

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக 21 நாட்கள் லாக்-டவுனால் கேரளாவில் மதுக்கடை, பார்கள் மூடப்பட்டதால் குடிக்க முடியாமல் பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு மது அடிமைகள் ஆளாவதைப் பார்த்து சிறப்பு அனுமதி மூலம் மது வழங்க கேரள அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்தது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சமூக விலக்கலைப் பின்பற்ற 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதீதமான மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், அடிமையானவர்கள் மீள் அறிகுறிகளுக்கு (withdrawal symptoms) தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மீள் அறிகுறிகள் என்பது, மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையானவர்கள் அதை தீடீரென்று நிறுத்தும் போது மனரீதியான பிரச்சினைகள், மயக்கம், படபடப்பு, அதீதமாக வியர்த்தல், கை நடுக்கம், குழப்பம், காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, தலைவலி, வாந்தி எடுத்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நிகழும். இதுபோன்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தாங்க முடியாமல் கேரளாவில் சமீபத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


இதையடுத்து கேரள மாநில அரசு திங்கள்கிழமை இரவு ஓர் உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட மருத்துவமனை, பொது சுகாதார மையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று பரிசோதனை செய்து, மது குடிப்பது உடல்நிலைக்கு அவசியமானது என மருத்துவர்களின் அனுமதிக் கடிதத்துடன் வந்து கலால் வரி அலுவலகத்தில் மதுவை அளவாக வாங்கிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தது.

கேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு (கேஜிஎம்ஓஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று (ஏப்.1-ம்தேதி) கறுப்பு புதன்கிழமையாக கடைப்பிடித்தது.

கேரள அரசின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு (கேஜிஎம்ஓஏ) சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க சிகிச்சை அளிக்க வேண்டுமே தவிர மீள் அறிகுறிகள் இருந்தால் மது வழங்கக்கூடாது. கேரள அரசின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். ஜெயசங்கரன் நம்பியார், ஷாஜி பி சாலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம், “மீள் அறிகுறிகள் இருக்கும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மது வழங்குவதால் அவர்கள் குணமடைந்துவிடுவார்களா? அறிவியல் பூர்வமாக இதற்கு ஏதேனும் விளக்கம் ஏதும் இருக்கிறதா? அறிவியல் பூர்வமான முடிவா? என்று கேட்டனர்.

மேலும், “ மீள் அறிகுறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு சிறப்பு அனுமதி மூலம் மது வழங்கும் கேரள அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்கிறோம். அடுத்த 3 வாரங்களுக்குள் கேரள அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Kerala HC staysGovt order on special passesTipplers to buy liquorThe Kerala High CourtWithdrawal symptomsDoctor’s prescription to purchase liquorகேரள அரசுகேரள உயர் நீதிமன்றம்மதுஅடிமைகளுக்கு மதுசிறப்பு அனுமதி மூலம் மதுமீள் அறிகுறிகள்கேரள உயர் நீதிமன்றம் தடை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author