Published : 02 Apr 2020 14:19 pm

Updated : 02 Apr 2020 14:19 pm

 

Published : 02 Apr 2020 02:19 PM
Last Updated : 02 Apr 2020 02:19 PM

திட்டமிடப்படாத லாக்-டவுனால் மக்களிடையே குழப்பம், வேதனை: மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

unplanned-implementation-of-lockdown-causing-chaos-and-pain-sonia-gandhi
சோனியா காந்தி : கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள 21 நாட்கள் லாக்-டவுன் நடவடிக்கை திட்டமிடப்படாத ஒன்று. இதனால் மக்களிடையே குழப்பமும், வேதனையும் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் டெல்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் 21 நாட்கள் லாக்-டவுன் குறித்து கடுமையாக விமர்சித்த அவர், மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

''கரோனா வைரஸ் காரணமாக தேசம் எப்போதும் இல்லாத சுகாதார, மனிதநேயச் சிக்கலில் தவித்து வருகிறது, ஒவ்வொருவரும் ஒற்றுமையுடன் செயலாற்றினால்தான் இதிலிருந்து மீள முடியும்.

தேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசுகள், முன்னணி அமைப்புகள், காங். தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் விளிம்பு நிலை மக்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். உலகம் முழுவதையும் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இந்த வைரஸ் மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் வலுவாக்க உறுதிப்படுத்திவிட்டது.

நம் தேசத்தில் ஏழைகளும், சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களும் கரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்கு உதவி செய்து ஆதரவு அளிக்க வேண்டும்.

லட்சக்கணக்கான ஏழைத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு உணவில்லாமல், தங்க இடமில்லாமல் செல்வது மனதை உடைக்கிறது. இந்த 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் நடைமுறைப்படுத்திவிட்டது. இதனால் ஏழைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

இந்த 21 நாட்கள் லாக்-டவுன் தேவையில்லாதது, திட்டமிடப்படாத செயல். இதனால் லட்சக்கணக்கான ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பெரும் குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு நம்பகமான மாற்றுப் பரிசோதனை இல்லை. அதுதான் வைரஸை எதிர்த்துப் போராட சிறந்த வழியாக இருக்கும். நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆதரவு அவசியம் தேவை.

கரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபடும் அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசங்கள், வென்டிலேட்டர்கள், சுவாசக்கருவிகள், போதுமான மருத்துவமனைகள், படுக்கைகள் இருப்பது அவசியம். கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவிவிட்டது என்ற காரணம் இல்லாமல் அரசு பார்த்துக்கொள்வது அவசியம்.

கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, படுக்கைகள், தனிமைப்படுத்தும் வசதி, பரிசோதனை வசதிகள், மருந்துகள் உள்ளிட்ட விவரங்களை மக்களுக்குத் தெளிவாக மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

அடுத்துவரும் கரீப் பருவ விவசாயத்துக்காக விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை எளிதாகக் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் கரோனா வைரஸால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 21 நாட்கள் ஊரடங்கால், பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்கிறார்கள். கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நிலை பரிதாபத்துக்குள்ளாகி இருக்கிறது.

ஊதியக் குறைப்பு, வேலையிழப்பு போன்றவற்றால் பெரும் சிக்கலில் இருக்கும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருளாதாரரீதியாக நிவாரணம் அளி்க்கும் வகையில் குறைந்தபட்ச பொது நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு வெளியிட வேண்டும்''.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Coronavirus outbreakLockdownTop Congress leadersChief Sonia GandhiSolidarity and helping the disadvantaged during the crisis.கரோனா வைரஸ்Congress Working Committeeசோனியா காந்திகாங்கிரஸ் காரியக் கமிட்டிதிட்டமிடப்படாத லாக் டவுன்சோனியா குற்றச்சாட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author