

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
இந்த ஆலோசனையின்போது கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பது எப்படி, டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம்களின் தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தற்போது கைவசம் உள்ள அத்தியாவசிய பொருட்கள், மருந் துப் பொருட்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637-ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள் ளது. புதிதாத 386 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் பெட்டிகள்
கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 5 ஆயிரம் ரயில்வே பெட்டிகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன்மூலம் 80 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலை (ஐசிஎம்ஆர்) சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “இதுவரை 47,951 பேரின் மாதிரிகளில் கரோனா தொற்று உள்ளதாக என சோதனை நடத்தியுள்ளோம். இன்று மட்டும் 4,562 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. கரோனா வைரஸ் உள்ளதாக என சோதனை நடத்த 41 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் நேற்று கூறும்போது, “டெல்லியில் நடந்த தப்ளிகி ஜமாத் முஸ்லிம் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலருக்கு நோய்த் தொற்று இருந்துள்ளது. அதனால்தான் நேற்று ஒரே நாளில் அதிகமான நபர்கள் நோய்த் தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இது தேசிய அளவிலான நிலைமை இல்லை.
கரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்த உதவும் கருவிகள், முகக் கவசங்கள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர லைப்லைன் விமானச் சேவை தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் சீனா, தென் கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கைகளை இந்தியாவிலும் பின்பற்றுவது தொடர்பாக பரிசீலிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
43 ஆயிரம் கடந்தது
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று வரை 8,74,081 ஆகவும் உயிரிழப்பு 43,291 ஆகவும் அதிகரித்தது. - பிடிஐ