

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஆர்.ஆர். கங்கா கேட்கர் நேற்று கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றை அறிய உதவும் பரிசோதனைக் கருவியை இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் ஓரிரு மாதங்களில் வைரஸ் தொற்று பரிசோதனைக் கருவி தயாராகி விடும் என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள் மூலம் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையைச் செய்வதற்கு சில தனியார் ஆய்வகங்களுக்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக விரைவான நடவடிக்கைகளையும், முடிவுகளையும் எடுப்பதற்காக வி.கே. பால், முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன் ஆகியோர் தலைமையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்), மத்திய உயிரி தொழில்நுட்ப துறை (டிபிடி) மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆகியவற்றுடன் இணைந்து இந்தக் குழு ஆலோசித்து முடிவுகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ