

டெல்லி மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஆனால் அது ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதது. நாட்டுக்கு எதிரான குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சித்துள்ளார்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடு தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இதில் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை இந்த மாநாட்டுக்கு வந்து சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்தநிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.
கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நிஜாமுதீன் மர்காஸ் கட்டிடத்தில் மாநாட்டில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர். அவர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு கரோனா பாதிப்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி வரும்நிலையில் இதுகுறித்து இன்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியதாவது:
‘‘டெல்லி மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம், ஆனால் அது ஒட்டுமொத்தமாக ஏற்க முடியாதது. நாட்டுக்கு எதிரான குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம். அங்கு பேசிய பேச்சுகள் கிரிமினல் குற்றம். சமூகவிலகலை சதி என்று பேசியதை ஏற்க முடியாது. இது குற்றச் செயல்’’ எனக் கூறினார்.