

அகில இந்தியப் போட்டிகளில் விருதுகள் பல வென்ற குத்துச்சண்டை வீராங்கனை, தற்போது கோமாவில் இருக்கும் அனீல் கென்யீவை கரோனா சிகிச்சைக்கு வருபவர்களுக்காக நாகாலாந்து அரசு மருத்துவமனை வெளியியேற்றியுள்ளது.
42 ஆயிரம் பேரை பலி வாங்கி உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா இந்தியாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. இந்தியாவில் கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்த மிகப்பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாநிலங்கள் தோறும் நடைபெற்று வருகின்றன. நோய்த் தொற்று பரவாமல் இருக்க மக்களிடையே சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதற்காக 21 நாள் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக நாடெங்கிலும் மருத்துவமனைகளில் மட்டுமின்றி, கல்லூரி வளாகங்கள், ஸ்டேடியங்கள், கல்யாண மண்டபங்கள் என பல்வேறு விசாலமான இடங்களிலும் லட்சக்கணக்கான படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. பல முக்கிய மருத்துவமனைகளில் கோவிட் 19 மையமாக மாற்றப்பட்டுவருவதால் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவருபவர்களும் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 11 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) பராமரிக்கப்பட்டு வந்த நாகாலாந்தின் வீராங்கனை அனீல் கென்யேவை பாதி சிகிச்சையிலேயே, வீட்டிற்கு அனுப்பியுள்ள தகவலும் வெளிவந்துள்ளது.
கென்யீ, குத்துச்சண்டையில் பங்கேற்று அகில இந்தியப் போட்டிகளில் பல விருதுகள் வென்றவர். 2008ல் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சார்பாக தென்கொரியாவில் பங்கேற்கும் ஒரே பெண்மணி என அரசால் அங்கீகரிக்கப்பட்டவர் கென்யீ. தொடர்ந்து களத்தில் வீராங்கனையாக வலம்வர வேண்டிய கென்யீ துரதிஷ்டவசமாக கென்யாவிலிருந்து திரும்பியபிறகு மூளைநோய் காரணமாக அவர் சரிந்து விழுந்தார்.
50 வயதான கென்யீ, நாகா மருத்துவமனை ஆணையம் கோஹிமாவிலிருந்து மார்ச் 30 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் மருத்துவமனைக்கு அருகிலேயே உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வீடு கென்யீவின் கணவர் - தற்காப்புக் கலைஞரும் எழுத்தாளருமான ஒக்கன்ஜீத் சந்தம் - மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்க வேண்டுமென வாடகைக்கு எடுத்திருந்த வீடு.
இதுகுறித்து கோமாவில் உள்ள குத்துச்சண்டை வீராங்கனையின் கணவர் ஒக்கன்ஜீத் சந்தம் கொஹிமாவிலிருந்து தி இந்துவிடம் கூறியதாவது:
எங்களுக்கு 1986ல் திருமணமானது. சர்வதேச போட்டிவரை சென்று திரும்பிய கென்யீக்கு பின்னர் மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதன்காரணமாக ஒரு நரம்பியல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக கவுகாத்திக்கு அவரை விமானம்மூலம் அழைத்துச் சென்றோம். 41 நாள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனை அவரை வெளியேற்றியது.
பின்னர் அவர் கோஹிமாவில் சக்கர நாற்காலியிலேயே உட்காரவைக்கப்பட்டிருந்தார். மூன்று வாரங்கள் கழடந்த பின்னர், மீண்டும் அவர் தானாக உட்கார முடியாமல் சரிந்தார். இதனால் நாகா மருத்துவமனையில் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. கடந்த 11 ஆண்டுகளாக அவர் கொஹிமாவில் உள்ள நாகா மருத்துவமனை ஆணையத்தில் கோமாவில்தான் இருக்கிறார்.
தற்போது கரோனா காரணமாக கொஹிமா மருத்துவமனையிலிருந்து கடந்த மார்ச் 30 அன்று வெளியேற்றிவிட்டனர். வீட்டிலிருந்து அவரை பராமரிப்பது அவ்வளவு எளிதல்ல, நாங்கள் செலவுகளைச் சமாளிக்க சிரமப்பட்டுவருகிறோம், ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு ஒருபோதும் தெரியப்படுத்த மாட்டோம்.
கென்யீ, வீட்டிற்கு வந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஆனால் அதே நேரத்தில் கவலையும் படுகிறோம், ஏனெனில் ஐசியுவில் அவர் வைக்கப்பட்டிருந்த விதமும் பராமரிப்பும் இங்கு அளிப்பது அவ்வளவு எளிதல்ல.
அவரது சுவாசக்குழாயில் தங்கியுள்ளவற்றை வெளியேற்றுவதற்காக ஒரு சிறிய உறிஞ்சும் இயந்திரத்தை மருத்துவமனை அவருக்கு வழங்கியது, அங்கு சுவாசிக்க உதவும் வகையில் ஒரு ட்ரக்கியோஸ்டமி குழாய் செருகப்பட்டுள்ளது. நான் அறையை ஒரு மினி ஐசியுவாக மாற்ற விரும்புகிறேன்.
அதற்காக இன்னும் ஒரு முக்கிய உபகரணத்திற்காக கடைகளுக்கு சென்றேன். ஆனால் லாக்டவுன் காரணமாக அது கிடைக்கவில்லை. நிலைமை (லாக்டவுன் ) விரைவில் சீரடையும் என்று நம்புகிறேன்.
நோயாளிகளை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவதற்கான இந்த முடிவு திடீரென்று உருவானது. மற்ற நோயாளிகளுக்கும் அவர்களின் உதவியாளர்களுக்கும் பிரச்சினைகள் எதுவும் உருவாகாமல் இருக்க இப்படி செய்திருக்கக்கூடும்.,
என் மனைவியால் தற்போது பேச முடியாத நிலை, அனீல் கென்யீவின் கண்கள் சாதாரணமாக பார்ப்பதுபோலத் தெரிந்தாலும், அவள் எங்களைப் பார்க்க முடியுமா என்று எங்களுக்குத் தெரியாது.
நான் அவரை விட்டு நகருவதேயில்லை. ஏனென்றால் இன்று நான் ஒரு முழு மனிதனாக உருவாக அவர்தான் காரணம். அந்த நன்றிக்கடனுக்காக எனக்காகவும், எங்கள் மகள் மற்றும் மகனுக்காகவும் அவர் செய்த தியாகங்களுக்கு நான் அவரை போராடியாவது காப்பாற்றிவிட வேண்டுமென நினைக்கிறேன்.
இவ்வாறு வீராங்கனை அனீல் கென்யீவின் கணவர் தெரிவித்தார்.