ரஷ்யர்கள் 400 பேருடன் புறப்பட்டது மாஸ்கோ விமானம்: இந்திய அதிகாரிகளுக்கு தூதர் நன்றி 

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் சிக்கித் தவித்த 400க்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டினர் புதன்கிழமை சிறப்பு விமானம் மூலம் தங்கள் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் இன்று தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் 41,000 க்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான கரோனா வைரஸ் ரஷ்யாவில் இதுவரை 2,337 பேரைப் பாதித்துள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக 1,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு உலக நாடுகளும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தங்கள் குடிமக்களை வெளியேற்ற சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுடன் நான்காவது பிரத்யேக விமானம் இன்று காலை புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து இந்தியாவுக்கான ரஷ்யாவின் தூதர் நிகோலே குடாஷேவ் ஒரு அறிக்கையில் இன்று கூறியுள்ளதாவது:

"இன்று, 400க்கும் மேற்பட்ட ரஷ்ய நாட்டினர் மாஸ்கோ செல்லும் விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். எங்கள் தோழர்களை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்ல இது நான்காவது அர்ப்பணிப்பு விமானமாகும். இதற்கு இந்திய அரசுத் துறை சார்ந்த பல்வேறு ஏஜென்ஸிகளின் உதவி அர்ப்பணிப்பு மிக்கது.

இந்திய வெளிவிவகார அமைச்சகம், சிவில் விமான இயக்குநரகம் மற்றும் உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினரும் இந்தச் சவாலான நேரத்தில் அன்பான ஆதரவு தந்தனர். தன்னலமற்ற முயற்சியுடன் செயல்பட்ட அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விமானப் பயணங்களை சாத்தியமாக்கிய தைரியமான விமான வீரர்களையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்று, ரஷ்யாவும் இந்தியாவும் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன. நாட்டு மக்கள் பலர் சமூக விலகல் காரணமாக வீட்டிலிருக்க நேரும்போது நிறைய சிரமங்களை எதிர்கொள்வதை அறிகிறோம். இருப்பினும் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கைகள். குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்கவே ஒன்றிணைந்து நமது நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

நமது தலைவர்களான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த விஷயத்தில் தனிப்பட்ட தொடர்பில் உள்ளனர்''.

இவ்வாறு இந்தியாவுக்கான ரஷ்யாவின் தூதர் நிகோலே குடாஷேவ் தெரிவிததார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in