

கரோனா வைரஸ் பாதிப்புகளின் காரணமாக இந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்புகள் தவிர மீதியுள்ள அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்க சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இதுவரை 1500க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள நிலையில் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். 21 நாள் லாக்-டவுன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளன. நோய்த் தொற்று பரவல் அச்சம் காரணமாக மக்கள் வெளியே வரவே தயங்கிவரும் இக்காலத்தில் பள்ளி மாணவர்களை தேர்வு எழுத வைக்கும் சிரமத்தைத் தவிர்த்து அவர்களுக்கு தேர்ச்சி வழங்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநிலத்தின் மூத்த கல்வி அதிகாரி ஒருவர் இன்று கூறியதாவது:
''கொடிய வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 19-ம் தேதி அன்று மாநில அரசு அனைத்துப் பள்ளிகளையும் மூடியது. ஏப்ரல் 14 வரை லாக்-டவுனைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் நாட்களில் பள்ளித் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை.
எனவே, 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தாமல், தேர்ச்சி (Pass) அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இதற்கான முடிவை அறிவித்தார்.
இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் 10 மற்றும் 12 வகுப்புகளின் சில பாடங்களின் தேர்வுகளை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தவில்லை. இதுகுறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும். லாக்-டவுன் காரணமாக இந்தத் தேர்வுகளையும் நடத்த முடியாத நிலைதான் தொடர்கிறது''.
இவ்வாறு சத்தீஸ்கர் மாநில மூத்த கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.