துப்புரவுத் தொழிலாளிக்கு ரூபாய் நோட்டு மாலை: மக்கள் மனம் மாறியுள்ளதாக பஞ்சாப் முதல்வர் நெகிழ்ச்சி

துப்புரவுத் தொழிலாளருக்கு பஞ்சாப் மாநிலத்தின் நாபா நகரவாசி ஒருவர் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கும் காட்சி.| படம்: ட்விட்டர்.
துப்புரவுத் தொழிலாளருக்கு பஞ்சாப் மாநிலத்தின் நாபா நகரவாசி ஒருவர் ரூபாய் நோட்டு மாலை அணிவிக்கும் காட்சி.| படம்: ட்விட்டர்.
Updated on
1 min read

துப்புரவுத் தொழிலாளிக்கு ரூபாய் நோட்டு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்த சம்பவம் நடந்தது. இந்நிலையில், துன்பகாலம் மக்கள் மனதை மாற்றியுள்ளதாக பஞ்சாப் முதல்வர் இன்று தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காலகட்டத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் துப்புரவுத் தொழிலாளிக்கு குடியிருப்பாளர் ஒருவர் ரூபாய் நோட்டு மாலை ஒன்றை அணிவித்த சம்பவம் பஞ்சாப்பில் நேற்று மாலை நடந்தது.

இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று இதுவரை 1500க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ளது. நாட்டில் இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். லாக்-டவுனில் வெளியே வர பயந்து மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் துப்புரவுத் தொழிலாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருவதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாட்டியாலா மாவட்டத்தில் நபா நகராட்சிப் பகுதியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நகர வீதிகளில் தூய்மைப் பணி மேற்கொற்கொண்டவர்களை அப்பகுதி மக்கள் கைதட்டி தங்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்ததோடு அவர்கள் மீது மலர்களைப் பொழிந்தும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சி குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வீடியோவை வெளியிட்டார். அதில் நாபா மக்கள் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாலைகளை அணிவித்துப் பாராட்டுவதைக் காண முடிந்தது. மேலும் அவர்களின் கடுமையான உழைப்பைக் கைதட்டி ஆரவாரித்துப் பாராட்டு தெரிவித்தனர். இதற்கிடையில் குடியிருப்பாளர்களில் ஒருவர் நகராட்சி துப்புரவுப் பணியாளருக்கு ரூபாய் நோட்டு மாலை ஒன்றை அணிவித்தார். இக்காட்சிகளை வெளியிட்டுள்ள பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், அதனுடன் தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

அதில் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியதாவது:

''துப்புரவுத் தொழிலாளி மீது நாபா மக்கள் பொழிந்த கைதட்டலையும் பாசத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

நம் அனைவரின் மனதில் உள்ள நல்ல சிந்தனைகளும் செயல்களும் இந்த துன்ப காலங்கள் எவ்வாறு வெளியே கொண்டுவருகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம். கோவிட்-19 க்கு எதிரான இந்தப் போரில் நம் முன்னணி வீரர்களை உற்சாகப்படுத்துவோம்''.

இவ்வாறு அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in