

டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால் தென் மாநிலங்களில் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் 1926-ம் ஆண்டில்தப்ளிக்-எ-ஜமாத் எனும் பெயரில்ஒரு முஸ்லிம் அமைப்பு இந்தியாவில் துவக்கப்பட்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது. இதற்கு ‘மர்கஸ்’எனப்படும் தலைமையகம் டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் இயங்கி வருகிறது.
இதன் சார்பில், இஸ்லாமிய மதமாநாடுகள்(இஸ்திமா) மற்றும் மதப்பிரச்சாரக் கூட்டங்கள்(தப்ளிக் ஜமாத்) அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இவை தப்ளிக் ஜமாத்தார் (மதப்பிரச் சாரகர்கள்) என்றழைக்கப்படும் அதன் உறுப்பினர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
1,850 பேர் பங்கேற்பு
இந்தக் கூட்டங்களில், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம். டெல்லியில் உள்ள மர்கஸுக்கு வரும் வெளிநாட்டவர், இந்தியாவில் தமதுபிரச்சாரப் பயணம் முடித்த பின் அங்கிருந்தே சொந்த நாடுகளுக்கு திரும்புவது வழக்கம்.
கடந்த மார்ச் 8-10, 12-15 ஆகிய தேதிகளில் டெல்லி நிஜாமுதீனில் இரண்டு இஸ்திமாக்கள் நடைபெற்றன. அதில், சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 1,850பேர் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் தமிழகம் மற்றும் தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதற்கு முன்பாகவே பரவத் தொடங்கி விட்ட கரோனா வைரஸ், இஸ்திமா விற்கு விமானங்களில் வந்த வெளிநாட்டவர்களில் சிலருக்கும் தொற்றியுள்ளது.
இது அப்போது கண்டறியப்படாத நிலையில் நடந்து முடிந்த கூட்டத்தில் இந்தியர் களுக்கும் கரோனா தொற்றுக்கான சூழல் நிலவி உள்ளது. இதை அறியாமல் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முஸ்லிம்கள் உள்ளிட்ட பலரும் வீடு திரும்பிவிட்டனர்.
தமிழர்களுடன் இந்தோனே சியா உள்ளிட்ட சில வெளிநாட்ட வர்களும் தமிழகத்தின் தப்ளிக் ஜமாத்துக்களில் கலந்து கொள்ள சென்றனர். இவர்களால் தமிழகத்தின் சேலம், ஈரோடு மாவட்டங்களில் பலருக்கு கரோனா தொற்று பரவியது
கடந்த வாரம் தெரிந்தது. இந்த இஸ்திமாவிற்கு வந்தவர்களில் இருவர்தான் தமிழகம் மற்றும் நகரிலும் கரோனாவால் உயிரிழந்ததாகக் சந்தேகிக்கப் பட்டனர்.
இதே வகையில், தெலங் கானாவிலும் வெளிநாட்டு ஜமாத் தார் சென்றதால் அங்கும் கரோனா பரவியது. இதில் கரோனா தொற்றுக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் இருவர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக, மார்ச் 24-ல் நடைபெறவிருந்த மற்றொரு இஸ்திமா ரத்தாகி, 2000 பேர் நிஜா முதீனின் மர்கஸிலும், அருகிலுள்ள பங்ளாவாலி மசூதியிலும் தங்கினர்.
வேறு எங்கும் செல்ல முடியாமல் ஒன்றுகூடி தங்கியவர்களுக்கும் கரோனா ஆபத்து ஏற்படலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தது. இவர்கள் அனைவருக்கும் கடந்த 3 தினங்களாக டெல்லி போலீஸார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர் களில் 24 பேருக்கு கரோனா தொற்றிஇருப்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து டெல்லி மாநில சுகாதரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேற்று கூறும்போது, ‘இஸ்திமா முடித்து தங்கியவர்களில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
850 பேர் கண்காணிப்பு
850 பேருக்கு கரோனாசந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைகள் தொடர்கிறது. மீதியுள்ளவர்களையும் டெல்லியின் பல்வேறு இடங்களில் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர். இதற்கு காரணமான தப்ளிக்-எ-ஜமாத் மீது நடவடிக்கைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கவும் டெல்லி துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைத்துளோம்’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்திமாவிற்கு வந்த வெளிநாட்டவர் கரோனா தொற்றுடன் தமிழகம், தெலங் கானா, உபி, ஜார்கண்ட், பிஹார், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற தகவலும் திரட்டப்படுகிறது. இவர்களால் கரோனா தொற்று மேலும் பரவி விடாமல் தடுக்கும் பொருட்டும் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சகம் பேசி வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும் போது, ’இஸ்திமாவிற்கு வந்து சென்றவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளிடம் கோரப்பட்டுள்ளது.
இஸ்திமாவை மறைத்துபொய்யான காரணங்களுடன் பல வெளிநாட்டினர் விசா பெற்றுஇந்தியா வந்திருப்பதும் தெரிந்துள்ளது. இதில் விசாரணை நடத்தி அவர்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் ஆலோசிக்கப்படுகிறது.
இவர்களில் பலர் டெல்லிக்கு வெளியே வேறு மாநிலங்களுக்கு அனுமதி இன்றி சென்ற சந்தேகமும் உள்ளது’ எனத் தெரிவித்தன.
இதனிடையே, இஸ்திமாவிற்கு வந்து சென்றவர்கள் தம் மாநில அரசுகளிடம் தாமாகவே முன் வந்து பதிவு செய்து சோதித்துக் கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம், கரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கலாம் என்றும் உத்தரபிரதேச மாநில முஸ்லிம் உலமாக்கள் வலியுறுத்தி உள்ளனர்.