கரோனா யுத்தம்: கறுப்பு புதன்கிழமை; கேரள அரசின் அறிவியல்பூர்வமற்ற முடிவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் திடீர் போர்க்கொடி

கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்
கேரள முதல்வர் பினராயி விஜயன் : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வையில் கேரள மாநிலத்தில் மதுக் கடைகள், பார்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அடிமையானவர்கள் மது குடிக்க முடியாமல் மனரீதியான சிக்கல்களைச் சந்தித்து தற்கொலை முடிவுக்குச் செல்வதால் சிறப்பு அனுமதியில் மது வழங்க கேரள அரசு அனுமதியளித்தது.

ஆனால் கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிவரும் மருத்துவர்கள், கேரள அரசின் முடிவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, நாளை(ஏப்ரல்-1) கறுப்பு புதன்கிழமையாக கடைப்பிடிக்க உள்ளனர்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்கவும் 21 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் கேரள மாநிலத்தில் அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால், அதீதமான மதுப் பழக்கத்துக்கு ஆளானவர்கள், அடிமையானவர்கள் மீள் அறிகுறிகளுக்கு (withdrawal symptoms) தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்

மீள் அறிகுறிகள் என்பது, மதுவுக்கும், போதை மருந்துக்கும் அடிமையானவர்கள் அதை தீடீரென்று நிறுத்தும் போது மனரீதியான பிரச்சினைகள், மயக்கம், படபடப்பு, அதீதமாக வியர்த்தல், கை நடுக்கம், குழப்பம், காய்ச்சல், இதயத் துடிப்பு அதிகரிப்பு, தலைவலி, வாந்தி எடுத்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை நிகழும். இதுபோன்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தாங்க முடியாமல் கேரளாவில் சமீபத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து கேரள மாநில அரசு திங்கள்கிழமை இரவு ஓர் உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட மருத்துவமனை, பொது சுகாதார மையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை ஆகியவற்றுக்குச் சென்று பரிசோதனை செய்து, மது குடிப்பது உடல்நிலைக்கு அவசியமானது என மருத்துவர்களின் அனுமதிக் கடிதத்துடன் வந்து கலால் வரி அலுவலகத்தில் மதுவை அளவாக வாங்கிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தது

கேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பு (கேஜிஎம்ஓஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்து நாளை (ஏப்.1ம்தேதி) கறுப்பு புதன்கிழமையாக கடைப்பிடிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

கேரள அரசின் முடிவுக்கு கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரா மருத்துவர் விஜயகிருஷ்ணன் கூறுகையில், “கேரள அரசின் முடிவு மிகப்பெரிய மருத்துவத் தவறு. இது அறிவியல் பூர்வமாக இதை மாநில அரசு செய்யவில்லை, கையாளவில்லை.

மது குடிக்காமல் வித்ட்ரால் சிம்டம்ஸ் இருப்போரை நாம் மதுவிலிருந்து மீட்போர் மையத்துக்கு அனுப்பி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதை விடுத்து மதுவை மீண்டும வழங்குவது அறிவியல் பூர்வமானது அல்ல. மது குடிக்காமல் உடல்நலக் குறைவோடு வருவோருக்கு மருத்துவ சிகிச்சை அளித்து மதுவிலிருந்து மீட்பதுதான் எங்கள் பணி. அவர்களுக்கு மது வழங்குங்கள் என்பது அனுமதிக் கடிதம் அளிக்க முடியுமா?

மருத்துவர்கள் அனைவரும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வரும்போது, அவர்களின் அறத்தை, மன உறுதியைக் குலைக்கும் வகையில் மாநில அரசின் செயல்பாடு இருக்கிறது'' எனக் கண்டனம் தெரிவித்தனர்

கடந்த 2018-19 ஆம் ஆண்டில் கேரளாவில் ரூ.14,508 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மது விற்பனை நிறுத்தப்பட்டதால், மது குடிக்க முடியாமல் பல்வேறு உடல்ரீதியான, உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாகி இதுவரை கடந்த 3 நாட்களில் 250-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in