கரோனா வைரஸ் பரவுவதற்கு முஸ்லிம்கள் மீது பழிபோடக் கூடாது: உமர் அப்துல்லா

தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா : கோப்புப்படம்
தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா : கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அபாண்டமாக பழி சுமத்தக்கூடாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தக்லிப் ஜமாத் நடத்திய மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்று அங்கு தங்கியிருந்த பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது. நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தக்லிப் ஜமாத்தில் நடந்த விஷயத்தையும், நாட்டில் கரோனா பரவுவதையும் தொடர்புபடுத்தி சிலர் இணையத்தில் விஷமத்தனமான பிரச்சாரங்களைப் பரப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக தக்லிம் ஜமாத் சார்பில் மவுலானாவும் விளக்கம் அளித்த பிறகும், இணையத்தில் கரோனாவையும் முஸ்லிம்களையும் இணைத்து மோசமான அவதூறு பரப்பப்படுகிறது.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் “ டெல்லி நிஜாமுதீனில் தக்லிப் ஜமாத்தில் நடந்த சம்பவம், உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று நோயை உருவாக்கி, முஸ்லிம்கள்தான் பரப்புகிறார்கள் என்று அவர்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்த வசதியான காரணமாகிவிட்டது.

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அபாண்டமாக பழி சுமத்தக்கூடாது . இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அரசின் விதிமுறைகளை, ஆலோசனைகளை, அறிவுரைகளை மற்ற அனைவரையும் போல் கடைப்பிடித்து நடப்பவர்கள்தான்.

கரோனா வைரஸையும், தக்லிப் ஜமாத்தையும் இணைத்து ட்விட்டரில் ஹேஷ்டேக் வைத்து ட்வீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட ஆபத்தானவர்கள். அவர்களின் மனம் நோயுள்ளதாக இருக்கிறது. உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதே என்று இயற்கை சிந்திக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in