Last Updated : 31 Mar, 2020 01:57 PM

 

Published : 31 Mar 2020 01:57 PM
Last Updated : 31 Mar 2020 01:57 PM

டெல்லி நிஜாமுதீன் மவுலானா மீது எஃப்ஐஆர் பதிவு: டெல்லி அரசு உத்தரவு; வெளிநாட்டினர் 300 பேரின் விசாவை கருப்புப் பட்டியலில் வைக்க திட்டம்

நிஜாமுதீன் தக்லிப் ஜமாத்தில் தங்கியவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காட்சி : படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மத வழிபாடு மாநாடு நடத்தி கரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்த நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஆனால், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

கரோனா வைரஸைத் தடுக்க சமூக விலக்கல் தேவை என்பதால், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து மக்கள் வீட்டுக்குள்ளே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், தப்லிக் ஜமாத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியியருந்தனர். மேலும் இந்த மாதம் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மத வழிபாடு மாநாடும் தப்லிக் ஜமாத் சார்பில் நடந்தது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், வெளிநாடுகளில் இருந்து 250-க்கு மேற்பட்டோரும் இதில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறிகுளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி அரசுத் தரப்பு கூறுகையில், “கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துவிட்டது. அப்போதே அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்கள், விருந்தினர் இல்லம், விடுதிகள் போன்றவற்றின் உரிமையாளர்கள் கூட்டம் கூடவிடாமல், சமூக விலக்கலைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒரே இடத்தில் தங்கவைத்து விதிமுறைகளை மீறிவிட்டார். மேலும் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளார்கள். ஆதலால் மவுலானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 பேர் கருப்புப் பட்டியல்

இதுதவிர இந்த மாநாட்டில் வெளிநாடுகளைச் சேர்ந்த 300 பேர் பங்கேற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 8 ஆயிரம் பேர் வரை இதில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “வெளிநாடுகளைச் சேர்ந்த 300 பேரும் சுற்றுலா விசா மூலம்தான் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். சுற்றுலா விசா மூலம் வந்தவர்கள் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்க அனுமதியில்லை அவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டதால், அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்குள் வரமுடியாத வகையில் கருப்புப் பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் நேபாளிகள் 19 பேர், மலேசியா (20), ஆப்கானிஸ்தான் (1), மியான்மர் (33), அல்ஜீரியா (1) டிஜிபவுட்டி (1), கிரிகிஸ்தான் (28), இந்தோனேசியா (78), தாய்லாந்து (7), இலங்கை (34), வங்கதேசம் (19), இங்கிலாந்து (3), சிங்கப்பூர் (1), பிஜி (4), பிரான்ஸ் (1), குவைத் (1) ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x