

டெல்லி நிஜாமுதீன் மேற்குப் பகுதியில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களில் 24 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் இன்று தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸை ஒழிக்க முடியும் என்பதால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளிேய வரவேண்டாம் என்று ஒன்று கூட வேண்டாம் என்று தடை விதித்துள்ளது.
இந்நிலையில் தென் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் காலணியில் தப்லிக் சர்வதேச தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதற்கு நிஜாமுதீன் மர்காஸ் என்று பெயர்.
கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருந்து 200 பேர் பல்வேறு அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மத மாநாட்டில் பங்கேற்றதையும் டெல்லியில் உள்ள சர்வதேச தப்லிக் ஜமாத்தில் 1,400 பேர் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் போலீஸாரும், சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் பலருக்கும் கரோனா அறிகுறிகள் இருந்ததும், பலருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் இன்று தனது இல்லத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சர்வதேச தப்லிக் ஜமாத்தில் தங்கியிருந்த 1,033 பேர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 700 பேர் மாநாட்டில் பங்கேற்றதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 335 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மத வழிபாடு மாநாட்டை நடத்திய முஸ்லிம் மவுலானாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவல் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
டெல்லி மாநில அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தப்லிக் தலைமை அலுவலகத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துவிட்டன்ர. ஜம்மு காஷ்மீர், தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபர் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டளளது.
ஹைதராபாத்தில் திங்கள்கிழமை இறந்த ஒருவர் தப்லிக் மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர், அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தெலங்கானாவில் 194 பேர், தமிழகத்தில் 981 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர வெளிநாடுகளைச் சேர்ந்த 250 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தோனேசியாவில் இருந்து 200 பேர், தாய்லாந்தில் இருந்து 30 பேர், கிர்கிஸ்தானில் இருந்து 10 பேர், மலேசியாவில் இருந்து 15 பேர் அடங்குவர்” எனத் தெரிவித்தனர்.