

ஹஜ் யாத்திரை செல்ல சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஆர்எஸ்எஸ் துணை அமைப்பான சேவா பாரதியின் கரோனா நிதிக்கு வழங்கியுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக 21 நாள் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாட்டில் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. எனினும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும்விதமான இம்முடிவுக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாக தெரிகிறது.
கரோனா பாதிப்புகளை எதிர்கொள்ள பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலும் நடிகர்கள் அக்ஷயக்குமார், பவன் கல்யாண், நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாட்டா உள்ளிட்ட பலரும் ஏராளமான நன்கொடை நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா நிதிக்காக தனது ஹஜ் யாத்திரை சேமிப்பு பணம் ரூ.5 லட்சத்தை வழங்கியுள்ளார் காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர்.
இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரிவான விஸ்வ சம்வத் கேந்திரா (ஐ.வி.எஸ்.கே) தலைவர் அருண் ஆனந்த் கூறியதாவது:
கலிதா பேகம், 87 வயதான இவர் ஹஜ் யாத்திரை செல்வதற்காக நீண்டநாட்களாக சேமிக்கத் தொடங்கி மொத்தம் ரூ .5 லட்சம் கைவசம் வைத்திருந்தார். திடீரென லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் யாத்திரைக்கான தனது திட்டங்களை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
திடீரென ஏற்பட்ட கோவிட் -19ன் கடுமையான தாக்கத்தினால் நாடு கடினமான நேரத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் சேவா பாரதி செய்துவரும் மக்கள் நலப் பணிகளால் கலிதா பேகம் ஜி ஈர்க்கப்பட்டார், மேலும் அமைப்புக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்க முடிவு செய்தார்.
இந்த பணத்தை ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஏழைகளுக்கும், சமூக சேவை அமைப்பான சேவா பாரதி பயன்படுத்த வேண்டும் என்று அந்தப் பெண் விரும்புகிறார்.
ஜம்மு-காஷ்மீரில் ஒரு கான்வென்ட்டில் கல்வி கற்ற முதல் சில பெண்களில் கலிதா பேகம் ஜி ஒருவராக இருந்தார். அவர் ஜனசங்கத்தின் தலைவராக இருந்த கர்னல் பியர் மொஹம்த்கானின் மருமகள் ஆவார்.
கலிதாஜி தனது வயதை மீறி, ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான மக்கள் நலப் பணிகளில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது மகன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியான ஃபாரூக் கான் தற்போது ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னரின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரிவான இந்திரபிரஸ்தா விஸ்வ சம்வத் கேந்திரா (ஐ.வி.எஸ்.கே) தலைவர் அருண் ஆனந்த் தெரிவித்தார்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும் சேவா பாரதி தன்னார்வலர்கள் உதவி தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். கூட்டமைப்பின் தொண்டர்கள் சனிக்கிழமை டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் வெளியூர் செல்ல தவித்துக்கொண்டிருந்த மக்களுக்கு உணவு விநியோகித்தனர்.