

'குடும்பத்தைக் காப்பாற்ற காங்கிரஸ் விரும்புகிறது, பாஜகவோ நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறது' என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுதையும் முடக்கிய காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிருப்தியில் பேசும்போது, “அவசரநிலை கால அணுகுமுறையை காங்கிரஸ் கட்சியின் நடத்தை வெளிப்படுத்துகிறது.
அதிகாரம் என்பது ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக விரும்புகிறது.குடும்பத்தைக் காப்பற்ற காங்கிரஸ் விரும்புகிறது, பாஜக-வோ நாட்டைக் காப்பாற்ற விரும்புகிறது” என்றார்.
நாடாளுமன்றத்தை முடக்கும் காங்கிரஸ் செயலைக் கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி இக்கருத்துகளை முன்வைத்தார்.
விஜய் சவுக் பகுதியிலிருந்து நாடாளுமன்றம் வரையில் நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியில் மோடி அரசின் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாத இறுதியில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த அரசு பரிசீலித்து வருகிறது.