

கரோனா வைரஸ் சிகிச்சைப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களை அழைத்துச் செல்ல, ஓலா வாடகைக் கால் டாக்ஸி நிறுவனம் 500 கார்களை வழங்குவதாக கர்நாடக துணை முதல்வர் சி என் அஸ்வத் நாராயண் திங்களன்று தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பேராபத்தை ஏற்படுத்தி இந்தியாவில் 1091 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து இந்தியா தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது.
சமூக இடைவெளியை கட்டாயமாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் லாக்டவுனை தேசம் கடைபிடித்து வருகிறது. கோவிட் 19 தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் மட்டும் 83 பேருக்கு கோவிட் 19 நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் ஓலா வாடகை கார் நிறுவனம் கரோனா பணிகளுக்காக 500 கார்களை வழங்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் சி என் அஸ்வத் நாராயண் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் திங்களன்று கூறியதாவது:
''ஓலா வாடகை கேப்ஸ் நிறுவனம் மருத்துவர்களை அழைத்துச் செல்வதற்கு 500 வாகனங்களை அரசுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வாகனங்கள் வைரஸ் நோய்த் தொற்று சிகிச்சையில் பணியாற்றும் மருத்துவர்களுக்காகவும் மற்றும் பிற கோவிட் 19 தொடர்பான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும்.
ஓலா கேப்ஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஹபாஷ் ஆகியோரின் நடவடிக்கை மிகவும் பாராட்டத்தது! கரோனாமீது இந்தியா போரிட்டு வெல்லும்.
இவ்வாறு கர்நாடக அமைச்சர் அஸ்வத் நாராயண் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.