Last Updated : 30 Mar, 2020 03:35 PM

 

Published : 30 Mar 2020 03:35 PM
Last Updated : 30 Mar 2020 03:35 PM

லாக்-டவுன் ரோந்து: 83 வயது முதியவருக்கு இனிப்பு ஊட்டி ரத்த அழுத்தத்தைச் சரிசெய்த போலீஸார்; வைரலான வீடியோ

லாக் டவுன் ரோந்துப் பணிகளுக்கிடையிலும் ரத்த அழுத்தம் பாதித்த முதியவருக்கு லக்னோ போலீஸார் இனிப்பு ஊட்டி உதவும் காட்சி. | படம்: ஏஎன்ஐ.

லக்னோ (உ.பி)

83 வயது முதியவருக்கு இனிப்பு ஊட்டி உ.பி.போலீஸார் ரத்த அழுத்தத்தைச் சரிசெய்த வீடியோ வைரலானது.

இந்தியாவில் கரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளி தேவை என்பதால் 21 நாள் லாக்-டவுனை அறிவித்தது மத்திய அரசு. லாக்-டவுனுக்குப் பிறகு மக்கள் கும்பலாக கூடுமிடங்களிலும் தேவையின்றி சுற்றித் திரிபவர்கள் மீதும் சில இடங்களில் போலீஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டி வந்தது.

கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் காவல்துறையினரின் அத்தகைய கடமையும் விமர்சினத்துக்கு உள்ளானது. எனினும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டுமென்பதை மக்கள் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.

கடுமையான ரோந்துப் பணிகளுக்கிடையில் உதவி வேண்டுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் போலீஸாரின் பங்களிப்பு தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. இன்று காலையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த ஒரு சம்பவமும் அத்தகைய ஒரு பாராட்டைப் பெற்றுள்ளது.

லக்னோ சாலையில் 83 வயது முதியவர் ஒருவர் நடந்து சென்றார். திடீரென போலீஸாரின் உதவியை அவர் நாடினார். தனக்குக் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாகத் தெரிவித்து உடனடியாக மருத்துவ உதவி ஏற்பாடு செய்யுமாறு அவர்களிடம் கேட்டார்.

அப்போது பணியிலிருந்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று கூறி புன்னகைத்தவாறே தன்னிடமிருந்து இனிப்புகளை அவருக்கு ஊட்டிவிட்டார். சிறிது நேரத்தில் 83 வயதான அந்த முதியவர் குழந்தை போல உற்சாகத்தோடு கையசைத்தார்.

தனது மகனும் மகளும் அமெரிக்காவில் வசிப்பதால்தான் இங்கே தனியாக வசிப்பதாகவும் தனது பெயர் ஆர்.சி.கேசர்வானி என்றும் தெரிவித்த முதியவர், போலீஸாருக்கு நன்றி தெரிவித்தார்.

போலீஸார் முதியவருக்கு இனிப்பு ஊட்டிவிடும் காட்சியும், முதியவர் குழந்தைபோல உற்சாகமாக கையசைக்கும் காட்சியும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அக்காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாக்-டவுன் கெடுபிடிக்கு இடையிலும் போலீஸாரின் மனிதநேயம் மிகவும் பாராட்டத்தக்கது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x