எங்களுக்கு ஒன்றும் வேண்டாம், எங்களை விட்டு விடுங்கள்: பிஹாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த பிரசாந்த் கிஷோரின் வீடியோ பதிவு

எங்களுக்கு ஒன்றும் வேண்டாம், எங்களை விட்டு விடுங்கள்: பிஹாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த பிரசாந்த் கிஷோரின் வீடியோ பதிவு
Updated on
1 min read

பிஹாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் தங்களை தயவு செய்து வெளியே விடுங்கள் என்று அவர்கள் கெஞ்சுவதாகவும் தேர்தல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வீடியோ ஒன்றை தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அவர் புலம்பெயர் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு, “கரோனா வைரஸ் கொள்ளை நோய்ப் பரவலைத் தடுக்கும் முயற்சியில் இன்னொரு திடுக்கிட வைக்கும் படம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல கஷ்டங்களைச் சந்தித்து இங்கு வந்து உழைக்கும் தொழிலாளர்களுக்கு இதயத்தைக் கலங்கடிக்கும் சமூக விலகல், தனிமைப்படுத்தல் ஏற்பாடு” என்று பதிவிட்டு #NitishMustQuit (நிதிஷ் விலக வேண்டும்) என்ற ஹேஷ்டேக்கையும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பிஹார்- உ.பி. எல்லயில் உள்ள சிவான் பகுதியைச் சேர்ந்தது என்று கூறப்பட்டுள்ளது. இது பாட்னாவிலிருந்து 130 கிமீ தொலைவில் உள்ளது.

அந்த வீடியோவில், ஒரு நபர் பத்திரிகையாளர் ஒருவரிடம் “காலையிலிருந்து பஸ் வந்து விடும் அனுப்பி விடுகிறோம் என்று கூறுகின்றனர். பஸ்சும் வரவில்லை எங்களையும் அவர்கள் விட மறுக்கிறார்கள். எங்களுக்கு எதுவும் வேண்டாம், எங்களை விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சுவது பதிவாகியுள்ளது.

சிவான் போலீஸ் அதிகாரி அபினவ் குமார் தனியார் ஊடகம் ஒன்றில் இது தொடர்பாகக் கூறும்போது, “அவர்களுக்கு ஸ்க்ரீனிங் செய்ய வேண்டும், பிறகு உணவளிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. அதன் பிறகுதான் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முடியும். ஆனால் மக்கள் அவசரப்படுகிறார்கள் என்று புரிகிறது” என்றார்.

நேற்று மாநில அரசுகள் அறிவித்துள்ளதன் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த கிராமம் திரும்பும்போது கட்டாய 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in