

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு 21 நாட்கள் லாக்-டவுனால் மிகப்பெரிய அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வெளியேறி சொந்த ஊர்களுக்குச் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு நாளைக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரோனா வைரஸை ஒழிப்பதில் முக்கியமானது சுய தனிமை, சமூக விலக்கலாகும். அதனை வலியுறுத்தும் விதமாக 21 நாட்கள் வீடடங்கு உத்தரவைப் பிறப்பித்து, அதை மத்திய அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் கூலித் தொழிலாளர்களும் முடங்கியுள்ளனர். அவர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நிதித் தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.
ஆனால், பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அடுத்த 21 நாட்களுக்கு வேலையில்லை என்பதால், தங்களின் சொந்த ஊருக்குக் கூட்டம் கூட்டமாக நடந்து செல்கின்றனர்.
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதே சமூக விலக்கல்தான். ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வது கரோனா வைரஸை வரவேற்பதாகும். இவர்களை அந்தந்த மாநிலங்களுக்குள்ளே தடுத்து 14 நாட்கள் தனிமையில் வைக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்த சூழலில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் முன்னிலையில் காணொலி மூலம் இன்று விசாரிக்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், “கரோனா வைரஸைக் காட்டிலும் அதனால் தொழிலாளர்கள் இடம் பெயர்வதால் ஏற்படும் பதற்றமும், அச்சமும் பெரிதாக இருக்கிறது. இந்த விஷயத்தி்ல நீதிமன்றம் குழப்பம் ஏற்படுத்தாது.
ஏனென்றால், தொழிலாளர்களைத் தடுக்க மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. உங்கள் மனுக்களை நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. மத்திய அரசு சார்பில் இதற்கு அறிக்கை அளிக்கட்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு வழக்கறிஞர் துஷா் மேத்தா வாதிடுகையில், “புலம்பெயரும் தொழிலாளர்களைத் தடுப்பது அவசியமானது. அவர்கள் நகர்வைத் தடுப்பதன் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். இதற்கு மத்திய அரசு சார்பிலும் மாநில அரசு சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ''இந்த விவகாரத்தில் மத்திய அரசு நாளைக்குள் அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். நாளை இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்” என உத்தரவிட்டார்.