

அத்தியவாசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் கர்நாடக எல்லையை திறந்து விட உத்தரவிடக் கோரி கேரள எம்.பி. ராஜ்மோகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.
அனைத்து மாநில எல்லைகளை மூட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால் கர்நாடக அரசு தனது எல்லையை முழுமையாக மூடியுள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு காய்கறிகள், உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் வந்து சேருவதில் சிக்கல் உள்ளது.
இதனால் கேரளாவின் வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப்பொருட்கள், மருந்துவப் பொருட்கள் கிடைத்தில் சிக்கல் நீடித்துள்ளது. இதையடுத்து அத்தியவாசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் கர்நாடக எல்லையை திறந்து விட உத்தரவிடக் கோரி கேரள எம்.பி. ராஜ்மோகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.