

21 நாள் லாக்டவுன் அறிவிப்பிற்கு பிறகு மகாராஷ்டிராவிலில் சிக்கித் தவித்த 2000 க்கும் மேற்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் இதுவரை 31 ஆயிரம் பேருக்கு மேலானோரை பலிவாங்கியுள்ளது. இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ள கோவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள் லாக்டவுனை கடந்த செவ்வாய் இரவு அறிவித்தார்.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான தினசரி கூலித் தொழிலாளர்கள் , தங்கள் வாழ்வாதாரம் குறித்த நிச்சயமற்ற நிலையில், பல்வேறு மாநிலங்களிலிருந்து தங்கள் சொந்த இடங்களுக்கு விரைந்து செல்லத் தொடங்கினர்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ''மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டாம்'' என்று வலியுறுத்தியதோடு, மகாராஷ்டிரா அரசாங்கம் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புவசதிகள் செய்துகொடுத்தபின்னரே லாக்டவுடன் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
எனினும் லாக்டவுன் காலங்களில் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடவேண்டும் என்ற பதட்டத்தின் காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மகாராஷ்டிராவை விட்டு பல்வேறு வாகனங்களிலும் நடைபயணமாகவும் வெளியேறத் தொடங்கினர்.
மகாராஷ்டிராவில் கர்நாடகாவைச் சேர்ந்த 2442 தொழிலாளர்களும் சிக்கியுள்ளதாக மாநில அரசுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களுக்கு மாநில அரசு உதவ முன்வந்தது.
கூலித் தொழிலாளர்களை பத்திரமாக அழைத்து வரவேண்டும் என்ற அரசின் முடிவை அடுத்து 62 பேருந்துகள் மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.. மாநில அரசின் முயற்சியால் கர்நாடகாவைச் சேர்ந்த 2442 தொழிலாளர்களும் நேற்றிரவு பத்திரமாக ஊர் திரும்பினர்.