Last Updated : 30 Mar, 2020 11:26 AM

 

Published : 30 Mar 2020 11:26 AM
Last Updated : 30 Mar 2020 11:26 AM

கரோனா வைரஸ் அச்சம்: 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா?- மத்திய அரசு பதில்

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 21 நாட்கள் வீடடங்கு, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் பரவியதையடுத்து அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் நாட்டில் தீவிரமாகப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடந்த 25-ம் தேதி அமல்படுத்தியது. இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

அன்றாடம் வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தும் கூலித்தொழிலாளர்களும் முடங்கியுள்ளனர். அவர்களுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நிதித் தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.

ஆனாலும், வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் தங்கள் சொந்த ஊர்களுக்குக் கூட்டம் கூட்டமாக நகர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நகர்ந்து வருகின்றனர்.

உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா.

இவர்கள் மூலம் கரோனா பரவும் அச்சம் அதிகரித்து இருப்பதால், ஊரடங்கு உத்தரவு திட்டமிட்டபடி ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிந்திவிடாது. அதற்கு மேலும் நீ்ட்டிக்கப்படும் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாக ஒரு ஆங்கில இணையதளம் கூட செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தி குறித்து அறிந்த மத்திய அரசின் பிரச்சார் பாரதி செய்திச் சேவை (பிபிஎன்எஸ்) மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விளக்கம் பெற்று வெளியிட்டுள்ளது. பிரச்சார் பாரதி ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “ ஒரு ஆங்கில இணையதளத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிக்கு மேலும் நீட்டிக்க அரசு திட்டமிட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக நகர்ந்து வருவதால், கரோனா அச்சம் காரணமாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது கண்டு வியந்தோம்.

இதை மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு சென்றோம். அவரும் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் ஏதும் இல்லை. ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிந்துவிடும்” எனத் தெரிவித்தார். ஆதலால், 21 நாட்களுக்குப் பின்பும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று உலா வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. அதை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x