

டெல்லியில் வாடகை வீடுகளில் குடியிருப்போரை வாடகை தரச்சொல்லி நில உரிமையாளர்கள், வீடு உரிமையாளர்கள் தொந்தரவு செய்யக்கூடாது, ஒருவேளை அவர்கள் வாடகை தர முடியாவி்ட்டால் அந்த வாடகையை அரசு செலுத்தும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமாக 21 நாட்கள் வீடடங்கு உத்தரவை பிறப்பித்து, அதை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நாட்களில் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். அன்றாடம் வேலைக்குச்சென்று பிழைப்பு நடத்தும் கூலித்தொழிலாளர்களும் முடங்கியுள்ளார்கள். அவர்களுக்காக மத்திய அரசும்,மாநில அரசுகளும் பல்வேறு நிதித்தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.
டெல்லி மாநிலத்தில் கரோனாவால் இதுவரை 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2 ேபர் உயிரிழந்துள்ளனர். 21 நாட்களாக வேலைக்கு செல்லமுடியாமல், வருமானம் இல்லாமல் இருக்கும் வாடகை வீட்டில் வசி்க்கும் மக்களிடம் வீ்ட்டு உரிமையாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வாடகை கேட்கக்கூடாது என்று முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடுத்த 2 அல்லது 3 மாதங்களுக்கு நில உரிமையாளர்கள், வீடு உரிமையாளர்கள் வாடகை வீ்ட்டில் குடியிருப்போரிடம் வாடகை கேட்கக்கூடாது. தயவு செய்து ஒத்திவையுங்கள். சூழல் இயல்புநிலைக்கு திரும்பட்டும், ஒருவேளை அவர்களால் வாடகை கொடுக்க முடியாத பட்சத்தில் அந்தவாடகை கட்டடணத்தை அரசே செலுத்தும்.
இந்த உத்தரவையும் மீறி வாடகை வீ்ட்டில் வசிப்போரிடம் வாடகை கேட்டு தொந்தரவு அளித்தால் வீட்டு உரிமையாளர், நில உரிமையாளர் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவில், தொழிலதிபர்கள், கடை உரிமையாளர்கள் ஆகியோர் தங்கள் தொழிலாலளர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும். நீங்கள் நன்றாக சம்பாதித்திருந்தால், இந்த நேரத்தில் உதவுங்கள், ஒருவொருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டிய நேரம், உங்கள் தொழிலாளர்களை பட்டிணியாக இருக்கவிடதீர்கள்.
புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக ஒன்றுகூடுவதைத் தவிருங்கள், அது ஆபத்தானது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் வழங்க டெல்லி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
அரசியல் செய்வதற்கு இது உகந்தநேரம் இல்லை, அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். என்னுடைய கட்சியினரும் அனைத்து வெறுப்பையும் மறந்து மற்ற கட்சியினருடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்