

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
இன்று 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அமைச்சர் குறிப்பிடவில்லை. நாட்டிலேயே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் நிருபர்களிடம் கூறுகையில், “மாநிலத்தில் இன்று 3 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணி்க்கை 196 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 பேர் கரோனா நோயிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர்.
155 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குணமடைந்து சென்ற அனைவரிடமும் அடுத்த 14 நாட்களுக்கு கண்டிப்பாக வீட்டில் சுய தனிமையில் இருக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.
தானே மண்டலத்தில் 107 பேர், புனேவில் 37 பேர், நாக்பூரில் 13 பேர், அகமது நகரில் 3 பேர், ரத்னகிரி, அவுரங்காபாத், சிந்துதுர்கா, ஜல்கான், புல்தானா ஆகிய நகரங்களில் தலா ஒருவர், யவதம்மாலில் இருவர், மிராஜில் 25, சதாராவில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் குணமடைந்து சென்றனர். புனேவிலிருந்து 15 பேர், நாக்பூர், அவுரங்காபாத்திலிருந்து தலா ஒருவர், யவதம்மாலில் 3 பேர் என மொத்தம் 34 பேர் குணமடைந்து சென்றனர். இப்போது 155 பேர் சிகிச்சையில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.