அயர்லாந்தில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு சரத் பவார் கோரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார்.
Updated on
1 min read

கரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் லாக்-டவுன் அறிவிக்கப்பட்ட நிலையில், அயர்லாந்தில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை உடனடியாக மீட்டு வர வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ், பூமிப்பந்தின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகெங்கும் 31 ஆயிரம் பேரைப் பலி வாங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பல நாடுகளிலும் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 27-ம் தேதி இரவு தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதி வரை இரண்டு வாரங்கள் லாக்-டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அயர்லாந்தில் சிக்கித் தவிக்கும் பல இந்திய மாணவர்களை மத்திய அரசு மீட்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''டப்ளின் நகரில் உள்ள கிரிப்ஃபித் கல்லூரியில் இந்திய மாணவரான சாங்கெத் வாலெஞ்ச் பயின்று வருகிறார். லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அவரும் பல இந்திய மாணவர்களும் அயர்லாந்தில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்களை இந்தியாவிற்கு மீட்டுச் செல்ல வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த மாணவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர். உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான எந்தவொரு செலவையும் தாங்குவது அவர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு சரத்பவார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in