

கடந்த 24 மணிநேரத்தில் 6 மாநிலங்களில் 106 பேர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “ இந்தியாவில் மொத்தம் 979 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 6 மநிலங்களில் இருந்து 106 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 21 நாட்கள் லாக்-டவுன் காலத்தில் மக்களில் மனரீதியான பிரச்சினை, அழுத்தம் ஏற்பட்டால் 08046110007 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம்” எனத் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் ஆர்.கங்கா கேட்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ இன்றுவரை ஐசிஎம்ஆர் சார்பில் 34 ஆயிரத்து 931 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது ஐசிஎம்ஆர் திறனில் 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இன்னும் ஆய்வுக்கூடங்களை அதிகப்படுத்தி இருக்கிறோம். 113 ஆய்வுக்கூடங்களில் 47 ஆய்வுக்கூடங்கள் தனியார் மூலம் நடத்தப்படுபவை. அவற்றிலும் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “லாக்-டவுன் நாட்களில் வேலைக்கு வராத ஊழியர்களின் ஊதியத்தைப் பிடிக்காமல் முழுமையான ஊதியத்தை வழங்க நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த காலகட்டத்தில் நில உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் வாடகை வசூலிக்கக் கூடாது.
அதேபோல வேலையாட்களை இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்றும் கட்டாயப்படுத்தக் கூடாது. இதைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் பொறுப்பாகும். அனைத்து மாநில எல்லைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.