Last Updated : 29 Mar, 2020 05:15 PM

 

Published : 29 Mar 2020 05:15 PM
Last Updated : 29 Mar 2020 05:15 PM

கரோனா உயிரிழப்புகளை விட முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவு மோசமாக இருக்கும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம் 

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மக்களிடையே பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்தது. சமூக விலக்கல் மூலமே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்த ஊரடங்கை கடுமையாகக் கடைப்பிடித்து வருகிறது மத்திய அரசு.

இதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

இந்த திடீர் ஊரடங்கு உத்தரவால் ஏராளமான தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்புகின்றனர்.

அவர்களுக்குப் பேருந்து கிடைக்காததால், நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கூட்டமாகச் செல்வது கரோனாவை வரவேற்பது போன்றதாகும் என்பதால் அதைத் தவிர்க்குமாறு பல்வேறு மாநில அரசுகளும் கேட்டுக் கொண்டுள்ளன.

இந்நிலையில் லாக்-டவுன் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

''கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவுக்குப் பதிலாக வேறு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந்தியாவின் சூழல் மிகவும் வித்தியாசமானது என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம்.

முழுமையான ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றும் நாடுகள் பின்பற்றுவதைக் காட்டிலும் வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை எடுத்திருப்பது அவசியம். நாள்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் இருக்கும் நாடு இந்தியா. திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொருளாதாரச் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

முழுமையான பொருளாதார முடக்கத்தின் விளைவு, கரோனா மூலம் உருவாகும் உயிரிழப்புகளைவிட மோசமாக இருக்கும் என அஞ்சுகிறேன். திடீரென அறிவிக்கப்பட்ட லாக்-டவுனால் மக்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், கட்டுமான தொழில்கள் மூடப்பட்டதால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்குச் செல்கிறார்கள். தினந்தோறும் ஊதியம் இல்லாமல், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யாமல் தொழிலாளர்கள் இருப்பது கடினம்.

இதுபோன்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு இடம் அளித்து, அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக அடுத்த சில மாதங்களுக்குப் பணம் செலுத்தி அரசு உதவ வேண்டும்.

முழுமையான லாக்-டவுன் என்பது நிச்சயம் லட்சக்கணக்கான மக்களை வேலையின்மையில் தள்ளும். இதனால் அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதன் மூலம் வீடுகளிலும், கிராமங்களிலும் இருக்கும் முதியோர்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் பேரழிவு தரும் உயிரிழப்பு நேரிடும்.

நம்முடைய மக்களின் குழப்பமான நிதர்சனத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் மத்திய அரசு மிகவும் நுணுக்கமாக, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

நம்முடைய முன்னுரிமை என்பது முதியோரைக் கண்டிப்பாக பாதுக்காகவேண்டும். வைரஸால் முதியோரால் எளிதாகப் பலியாகக்கூடும். ஆதலால், இளைஞர்களிடம் தெளிவாக எடுத்துரைத்து, முதியோருக்கு இருக்கும் ஆபத்தை உணர வைக்க வேண்டும்''.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x