Last Updated : 29 Mar, 2020 03:21 PM

 

Published : 29 Mar 2020 03:21 PM
Last Updated : 29 Mar 2020 03:21 PM

ஈரானில் இருந்து 275 இந்தியர்கள் மீட்பு: ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைப்பு

ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியப் பயணிகள் ஜோத்பூர் வந்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

ஜெய்பூர்

ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 275 இந்தியர்கள் மீட்கப்பட்டு இன்று காலை டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் இவர்கள் அனைவருக்கும் முதல்கட்டப் பரிசோதனை முடிந்து ஜோத்பூரில் உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஈரானுக்கு புனிதப் பயணம் சென்ற இந்தியர்கள் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக எங்கும் செல்ல முடியாமல் அந்நாட்டில் சிக்கியிருந்தனர். இவர்களை மீட்க அனைத்துக் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஈரானில் சிக்கியவர்களின் உறவினர்களும் மீட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ஒவ்வொரு கட்டமாக இந்தியர்கள் மீட்டு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், ஈரான் நாட்டில் சிக்கிய 275 இந்தியர்கள் இன்று தனி விமானத்தில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் முதல்கட்ட உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைக்குப் பின் அனைவரும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ராணுவ முகாமில் உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், “ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட 275 இந்தியர்கள் ஜோத்பூர் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 142 ஆண்கள், 133 பெண்கள், 2 பச்சிளங்குழந்தை உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ட்விட்டரில் கூறுகையில், “ ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் டெல்லியிலிருந்து ஜோத்பூருக்கு ஸ்பைஸ்ஜெட், இன்டிகோ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆப்ரேஷன் நமஸ்தே, கோவிட்-19க்கு எதிராக இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அனைத்துப் பயணிகளும் பரிசோதிக்கப்பட்டு, ஜோத்பூர் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x