

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் முதல் உயிரிழப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தகுந்த இருப்பிடங்களை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புதிய நபர்களுக்கு நோய்த்தொற்றுவது வெகுவாக குறைந்து வருகிறது.
எனினும் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கொச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் 170-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதியான நிலையில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 918 ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 19 பேர் இறந்துள்ளனர்.
இதற்கிடையில் நடுவழியில் தவித்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தகுந்த இருப்பிடங்களையும், உணவு வசதிகளையும் செய்து தருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்கள் சாலை வழியாக செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக (எஸ்டிஆர்எப்) ரூ.29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில், வெளிமாநிலத்தில் இருந்து வந்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிட வசதிகளை ஏற்படுத்தித்தர அந்த நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில், லக்னோ, கான்பூர், மீரட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்காக 1,000 சிறப்பு பஸ்களை உத்தரபிரதேச மாநில அரசு இயக்குகிறது. இந்த பஸ்களில் ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக டெல்லியையொட்டியுள்ள மேற்கு உத்தரபிரதேசத்தில் இருந்துஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இதனிடையே வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அறிகுறிகளுடன் இருப்பவர்களைத் தனிமைப்படுத்த ரயில்வே துறை சார்பில் ஏ.சி. வசதி இல்லாத பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணி முடிந்துள்ளது.
இதை ஆய்வு செய்யும் பணி அடுத்த சில நாட்களில் முடிந்தவுடன், ஒவ்வொரு ரயில்வே மண்டலமும், வாரத்துக்கு 10 ரயில் பெட்டிகளை தனித்தனி வார்டுகளாக மாற்றும் பணியைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 180-ஆக உயர்ந்துள்ளது. மும்பையிலிருந்து 5 பேருக்கும், நாக்பூரிலிருந்து 2 பேருக்கும் நேற்று கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 5.95 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே ஜனவரி 18 முதல் மார்ச் 23-ம் தேதிக்குள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 15 லட்சம் பேரை கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரவைச் செயலர் தெரிவித்துள்ளார். - பிடிஐ