

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏழுமலையான் கோயில் உட்பட தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மலைப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. உலக நன்மைக்காக திருமலையில் வேத பண்டிதர்கள் மூலம் யாகங்கள் நடத்தப்படுகின்றன. இதில் தன்வந்திரி யாகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த யாகத்தில் பங்கேற்ற தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் பின்னர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திருப்பதியில் ஆதரவற்றோர், யாசகர்கள் உணவின்றி தவிப்பதாக தெரியவந்தது. இதையடுத்து தினமும் 50 ஆயிரம் பேருக்கு சனிக்கிழமை முதல் உணவுப் பொட்டலம் வழங்க முடிவு செய்யப்பட்டு, விநியோகம் தொடங்கியுள்ளது.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான ‘பேர்ட்ஸ்’ எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவமனை, கரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அனில் குமார் கூறினார். என்.மகேஷ்குமார்