

கொடிய கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்த ம.பியைச் சேர்ந்த பழங்குடிகள் 30 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை நோக்கி போர்ப்படை போல மிக நீண்ட நடை பயணத்தை மேற்கொண்டனர்.
கோவிட் 19 ஐ பரவாமல் தடுப்பதற்காக கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடி நாடு முழுவதும் லாக்டவுனை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கூலித் தொழிலாளர்கள் கட்டுமானத் தொழிலாளர்கள் என பல அடித்தட்டு தொழிலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களுக்கு வேலை இல்லாமல் போனது.
இதனால் மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தைச் சேர்ந்த 30,000 பழங்குடித் தொழிலாளர்கள் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ளனர். இதே மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 30,000 பேர் இந்த மாநிலங்களில் இன்னும் சிக்கித் தவிக்கின்றனர்.
போக்குவரத்து ரத்து செய்த பிறகு, கடைகள் மூடப்பட்டு, உணவு வழங்கல் நிறுத்தப்பட்டதால், சில குடும்பங்கள் பிக்-அப் லாரிகளை வாடகைக்கு எடுத்தன, மற்றவர்கள் ஜீப்புகளை நாடினர். ஆனால் சாமான்கள், தண்ணீர் கேன்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு மேற்கு மத்தியப் பிரதேசத்திற்கு அவர்கள் திரும்பிச் சென்றனர்,
லகான் என்பவர் 300க்கும் மேற்பட்ட மைல்களைத் தாண்டி, நான்கு முறை போக்குவரத்தை மாற்றி, மூன்று நகரங்களில் இரவுகளில் தங்கி, ஒருவழியாக மத்திய பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் தனது வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
ஒரு பழங்குடியினரான லகான் தனது மனைவி மற்றும் இரண்டு டீனேஜ் மகள்களுடன் குஜராத்தின் ராஜ்கோட்டிலிருந்து 450 கி.மீ தூரம் நடந்தே வந்துள்ளார். ஒரு கட்டுமானத் தொழிலாளி லகான் தன் பயணத்தைப் பற்றி கூறுகையில், "இது மிக நீண்ட பயணம். எங்களிடம் சாப்பிடுவதற்கு போதுமான ஆகாரம் இல்லை, ஆனால் எப்படியாவது எங்கள் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
ஏனென்றால் எங்களுக்கு வீடுதான் பாதுகாப்பு.அவர் பிடோல் நுழைவு இடத்தை அடைந்ததும், சுகாதார அதிகாரிகள் அவரை பரிசோதித்தனர். பிறகு அனைவருக்கும் உணவு கொடுத்தனர்.
அவர் உள்ளிட்ட குடும்பங்களை, அவர் தனது கிராமத்திற்குத் திரும்புவதற்காக ஒரு பேருந்தில் ஏற்றிச் சென்றார். மைக்ரோஃபோனில், ஒரு அதிகாரி அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்போதுகூட ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்கவும் அறிவுறுத்தினார்'' என்றார்.
மேலும் 5,000-7,000 தொழிலாளர்கள் விடிஷா மற்றும் உஜ்ஜைனுக்கும், 630 கி.மீ தூரத்தில் உள்ள மொரேனா மற்றும் குவாலியர் மாவட்டங்களுக்கும் குஜராத்திலிருந்து லம்பேலா மற்றும் கஞ்சவனி நுழைவு வாயில்கள் வழியாக ஜாபுவாவைக் கடந்தனர்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு இப்போதுதான் வருகிறார்கள்
பழங்குடி மக்கள் ஊர் திரும்பியது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் அபய சிங் கராரி கூறியதாவது:
"தொழிலாளர்கள் திரும்பி வருவது இன்னும் இரண்டு-மூன்று நாட்களுக்கு தொடரும். இப்போது வரை, தொழிலாளர்கள் தங்களுக்கு பயணம் தடைசெய்யப்பட்டதாகவே நினைத்தனர். அவர்கள் பயணம் செய்ய எந்த தடையுமில்லை. கடந்த ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின் போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை வாக்களிக்க ஊர் திரும்புமாறு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
இப்பொழுதுகூட அந்த பட்டியல் கையில் இருக்கிறது. இம்மக்களை இங்கேயே நிரந்தரமாக தங்கவைப்பதற்கு அவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு குஜராத்தில் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டோம், அதன்பிறகு அவர்கள் இப்போதுதான் திரும்பி வருகிறார்கள். "
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து 5,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அண்டை பகுதியான அலிராஜ்பூர் மாவட்டத்திற்கு திரும்பி வந்துள்ளனர், பெரும்பாலும் வாடகைக்கு எடுக்கப்பட்ட லாரிகளில், வந்து சேர்ந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, பழங்குடியினர் திருவிழாவான பாகோரியா ஹாட்டிற்காக பலர் பிப்ரவரியிலேயே ஏற்கெனவே திரும்பி வந்துவிட்டனர். இல்லையென்றால், இன்னும் பலர் சிக்கித் தவித்திருப்பார்கள். "
இவ்வாறு துணை ஆட்சியர் அபய சிங் கராரி தெரிவித்தார்.
கட்டுமானத் தொழிலாளர்களாக மாறிய விவசாயிகளுக்கு மீண்டும் சொந்த வேலை
ரத்லம் மாவட்ட ஆட்சியர் ருச்சிகா சவுகான் கூறுகையில், ''ஊர் திரும்பியுள்ள இந்த பழங்குடி மக்கள் விவசாயத் தொழிலாளர்களாக இருந்தவர்கள். மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்த போது அவர்கள் வேலை மாறியது. ஆனால் இயந்திரமயமாக்கல் மற்ற மாநிலங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது.
மத்திய பிரதேசத்திலிருந்த உழைப்பு ஒப்பீட்டளவில் மலிவானது. அவர்கள் ஊர் திரும்பிய பிறகு, இப்போது அறுவடைக் காலமாதலால் உள்ளூரிலேயே அவர்களுக்கு வேலை கிடைக்கும். உண்மையில் அவர்கள் ஒருகாலத்தில் செய்துவந்த விவசாயம்தான் அவர்கள் வாழ்வாதாரம். பருவமழை பொய்த்ததால் அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உணவு மற்றும் தங்குமிடம் குறித்த அவர்கள் பணியாற்றிவந்த வெளிமாநில நிர்வாகங்களின் உத்தரவாதங்களை மீறி தொழிலாளர்கள் திரும்பி வருகிறார்கள், ஏனென்றால் வீடுதான் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. அக்கம்பக்கத்தினர் உணவு மற்றும் பண உதவிகள் செய்வார்கள். நகரங்களில் இருந்தபோது ஆண்களும் டீனேஜர்களும் வேலைக்கு வெளியே செல்வார்கள்.
இப்போது குடும்பமாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் அனைவரும் திரும்பியுள்ளார். குடும்பம் ஒன்றாக இருப்பது இதுபோன்ற நேரங்களில் அலைய நேரிடும்போது ஒருவித அச்சத்தைப் போக்க உதவும். " என்றார்.