

கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ரேடியோக்கள் பெரும் பங்காற்ற முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.
காட்சி ஊடக பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடந்து நாட்டின் முன்னணி நாளிதழ்கள் உட்பட பத்திரிகை ஆசிரியர்கள், நிறுவனங் களின் தலைவர்களுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மக்களுக்கு சரியான தகவல்களை தருவதும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அவசியம் என்று அப்போது பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ரேடியோ ஜாக்கிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது கரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பின்னர் இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ரேடியோக்கள் பெரும் பங்காற்ற முடியும். குறிப்பாக பெரும் பீதியில் உறைந்து இருக்கும் மக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை உருவாக்க வேண்டும். இதற்கு ரேடியோக்கள் பெரும் பங்கு வகிக்க முடியும்.’’ எனக் கூறியுள்ளார்.