Last Updated : 28 Mar, 2020 02:24 PM

 

Published : 28 Mar 2020 02:24 PM
Last Updated : 28 Mar 2020 02:24 PM

கரோனாவுக்கு கேரளாவில் முதல் உயிரிழப்பு

கரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கேரள மாநிலம் முதல் உயிரிழப்பைச் சந்தித்துள்ளது.

நாட்டிலேயே முதன் முதலாக கரோனாவுக்கு நோயாளி பாதிக்கப்பட்டது கேரளாவில்தான். ஆனால், அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டாலும் கடந்த வாரங்களாக கேரளாவில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் இதுவரை 14 மாவட்டங்கள் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி, 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 299 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றனர். இதுவரை எந்தவிதமான உயிரிழப்பையும் சந்திக்காத கேரள மாநிலம் முதன்முதலாக இன்று உயிர் பலி கொடுத்துள்ளது.

மாநில வேளாண்துறைஅமைச்சர் வி.எஸ். சுனில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “ ஐக்கிய அரபு அமீரத்தில் இருந்து வந்த கவந்த 69 வயது முதியவருக்கு கடந்த 22-ம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்கு இதயக் கோளாறும், ரத்த அழுத்தமும் இருந்ததால், கொச்சி மருத்துவமனையி்ல அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

வழக்கமான நோய்கள் இருப்பதால், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த முதியவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திலிருந்து அந்த முதியவரை அழைத்து வந்த அவரின் மனைவி, ஓட்டுநரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

மாநில இந்திய மருத்துவக் கவுன்சிலின் மருத்துவர் ஸ்ரீஜித் நாயர் கூறுகையில், “இதய நோயாளிகளுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு அது பெரும் ஆபத்தாக அமையும். ஆதலால், இதய நோயாளிகள், நீரிழிவு நோயளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து வீட்டுக்கள் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x