Last Updated : 28 Mar, 2020 11:51 AM

 

Published : 28 Mar 2020 11:51 AM
Last Updated : 28 Mar 2020 11:51 AM

பிரசவத்தின்போது லாக் டவுனில் சிக்கிய கணவர்: ஊருக்கு வர உதவிய காவலரின் பெயரை குழந்தைக்குச் சூட்டிய பெண்; உ.பி.யில் நெகிழ்ச்சி

கரோனோ வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றனர். சிலர் ஊருக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

இக்கட்டான இத்தருணத்தில் கணவர் நொய்டாவில் சிக்கியிருக்க, அவர் ஊருக்குத் திரும்பி வர உதவிய போலீஸாரின் பெயரை தனக்குப் பிறந்த குழந்தைக்குப் பெயரிட்டுள்ளார் அந்தத் தாய்.

பரேலியில் வசிக்கும் 25 வயதான தமன்னா கானுக்கு இது முதல் குழந்தை. பிரசவத்தின்போது தனது கணவர் உடன் இருக்க வேண்டுமென்பது அவரது ஆசை. ஆனால் அவரது கணவரோ நொய்டாவில் சிக்கியிருக்கிறார். எப்படியாவது தனக்குப் பிறக்கும் குழந்தையை கணவர் காணவேண்டும் என்ற ஆவல் ஒருபக்கம். தமன்னா உதவி கோரி சமூக வலைதளம் மூலம் பரேலியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஷைலேஷ் பாண்டேவுக்கு வீடியோ செய்தி அனுப்பினார்.

பரேலியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சைலேஷ் பாண்டே ஏஎன்ஐயிடம் கூறுகையில், "எனக்கு சமூக ஊடகங்கள் மூலம் செய்தி கிடைத்தது. அதில் தமன்னா கான் போலீஸாரிடம் உதவி கோரியுள்ளார். நாங்கள் அப்பெண்ணை அணுகினோம். பின்னர் நொய்டாவிலிருந்து தனது கணவர் அனீஸை அழைத்து வர உதவுமாறு நொய்டா காவல் நிலையத்திற்கு வேண்டுகோள் விடுத்தோம். அவர்கள் நொய்டாவிலிருந்து ஊர் திரும்ப ஒரு காரை ஏற்பாடு செய்தனர். பெண்ணின் கணவர் சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்தார். அந்தப் பெண் வியாழக்கிழமை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்'' என்றார்.

நொய்டா ஏடிசிபி ரன்விஜய் சிங், இந்தக் கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளித்தார். அந்தப் பெண்ணின் கணவர் சரியான நேரத்தில் பரேலியை அடைவதை உறுதி செய்தார். அந்தப் பெண் இப்போது தனக்குப் பிறந்த குழந்தைக்கு முகமது ரன்விஜய் கான் என்று பெயரிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய தமன்னா கான் கூறுகையில், "ரன்விஜய் சார் இப்போது எங்கள் வாழ்வில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். பல பொறுப்புகள் இருந்தபோதிலும், இதுபோன்ற சமயங்களில் அவர் தனிப்பட்ட முறையில் சென்று என் கணவரைத் தேடிச் சென்று சந்தித்தார். எனது கணவர் சரியான நேரத்தில் பரேலியை அடைவதை உறுதி செய்தார். பிறந்த குழந்தையை தந்தை பார்க்க வேண்டுமென்ற எனது ஆவலும் நிறைவேறியது.

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்கான ஒரு வீடியோவில் பேசும்போது இந்த அளவுக்கு எந்த உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. சில மணிநேரங்களிலேயே சைலேஷ் பாண்டே சார் என்னை வந்து பார்த்து என் கணவரிடம் தொலைபேசியில் பேசினார். என்னைப் பொறுத்தவரை, போலீஸார்தான் உண்மையான ஹீரோக்கள். நான் எனது குழந்தைக்கு முகமது ரன்விஜய் கான் என்று பெயர் சூட்டியுள்ளேன்''.

இவ்வாறு தமன்னா கான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x