

வெளிமாநிலங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்களது சொந்த மாநிலம் திரும்புவதை தடுக்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக வேலை இல்லாததால் வெளிமாநிலங்களில் வேலை செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக திரும்பி வருகின்றனர்.
இதனால் கரோனா வைரஸ் மேலும் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை சொந்த ஊர்களுக்குச் செல்ல விடாமல் இருக்கும் இடத்திலேயே வைத்திருக்குமாறு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுபோல் ஓட்டல்கள், பெண்கள் விடுதிகள் போன்றவற்றுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. - பிடிஐ