Published : 28 Mar 2020 08:49 AM
Last Updated : 28 Mar 2020 08:49 AM

மருத்துவ ஊழியர்களை காலி செய்ய சொன்னால் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: கர்நாடக சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

பெங்களூரு

கர்நாடக மாநில‌த்தில் கரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. 10 மாத குழந்தை உட்பட 64 பேருக்கு அந்த வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மார்ச் 10ம் தேதி கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 76 வயதான முதியவர் மார்ச் 10 ம் தேதி உயிரிழந்தார். நேற்று முன் தினம் சிக்க‌பளாப்பூரை சேர்ந்த 72 வயதான பெண் பலியானார். இந்நிலையில் நேற்று மூன்றாவது பலியாக தும்கூருவை சேர்ந்த 62 வயதான முதியவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் பரவும் என்ற‌ அச்சம் காரணமாக வாடகை வீடுகளில் தங்கியுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் துன்புறுத்துவதாக புகார் எழுந்தது. இதேபோல வாடகை விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநில மற்றும் வெளியூர் ஆட்களை விடுதியை விட்டு அதன் உரிமையாளர்கள் வெளியேற்றுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் கர்நாடக சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள ஆணையில், “கரோனா வைரஸ் பீதி காரணமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோரை வீட்டை காலி செய்யுமாறு தொல்லை கொடுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் 21 நாட்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பாதியில் வீட்டை காலி செய்ய சொல்வதும், விடுதியை விட்டு வெளியேற்றுவதும் சட்டப்படி குற்றமாகும். கொள்ளை நோய் காலத்தில் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் வெளியே அனுப்புவதற்காகவும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் தண்டனைகள் விதிக்க‌ப்படும்.

கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், காவல் துறை அதிகாரிகள் இதனை கண்காணித்து விதிமுறையை மீறும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவ‌டிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆணையின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு தினமும் அறிக்கை அனுப்ப வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. கொள்ளை நோய் காலத்தில் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காகவும், ஊரடங்கு பிறப்பித்த நிலையில் வெளியே அனுப்புவதற்காகவும் கடும் தண்டனைகள் விதிக்க‌ப்படும். இரா.வினோத்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x