சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் பெங்களூருவில் போலீஸாரை தாக்கிய இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில் பெங்களூருவில் போலீஸாரை தாக்கிய இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு
Updated on
1 min read

பெங்களூருவில் போலீஸாரை தாக்கிய இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி பெங்களூருவில் உள்ள பூபனசந்திராவை சேர்ந்த தஜோத்தின் (29), மஞ்சுநாத் (28) ஆகிய இருவர் வீட்டை விட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மஞ்சண்ணா இருவரையும் லத்தியால் தாக்கியுள்ளார். வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் தஜோத்தின்னும் மஞ்சுநாத்தும் சேர்ந்து காவலர் மஞ்சண்ணாவை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சஞ்சய் நகர் போலீஸார் தஜோத்தின், மஞ்சுநாத்தை பிடித்து விசாரித்தனர். போலீஸார் பிடியில் இருந்த தஜோத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரு வடக்கு மண்டல துணை காவல் ஆணையர் ஷஷி குமார் கூறியதாவது:

தஜோத்தின், மஞ்சுநாத் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வீலிங் செய்துள்ளனர். இதனை எச்சரித்த போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த போலீஸார் இருவரையும் சஞ்சய் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

அப்போது தஜோத்தின், மஞ்சுநாத் இருவரும் சேர்ந்து போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் துணை காவல் ஆய்வாளர் ரூபா, காவலர் சுரேஷ் குமார் காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தஜோத்தின் இடது காலில் குண்டு பாய்ந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. காயமடைந்த குற்றவாளிகள் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in