

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக அதிகரித்துள்ளது, 19 பேர் பலியாகியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
நாட்டில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவையும் மத்திய அரசு பிறப்பி்த்து செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவதும் அதிகரித்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், “ நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873ஆக அதிகரித்துள்ளது, பலியானோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.79 பேர் குணமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
உயிரிழப்பு விவரங்களில் நேற்றைய நிலவரத்தோடு ஒப்பிடுகையில் புதிதாக இரு உயிரிழப்புகள் ேசர்க்கப்பட்டுள்ளன, அது எந்த மாநிலத்தில் என்பது குறிப்பிடப்படவி்ல்லை. இன்னும் மாநில வாரியாக உயிரிழப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை.
மகாராஷ்டிராவில் 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், கர்நாடக மாநிலத்தில் 2 பேரும், மத்தியப்பிரதேசம், தமிழகம், பிஹார், பஞ்சாப், டெல்லி, மே.வங்கம், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.